இரகசியம்

இரகசியம், பிஎஸ்வி. குமாரசுவாமி, மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் பி லிட், 45, மால்வியா நகர், போபால் 462003, விலை 295ரூ.

மற்றுமொரு சுய முன்னேற்ற புத்தகம். மற்றுமொரு என்ற வார்த்தையில் லேசாய் அலுப்புத் தெரியும். ஆனால் இந்தப் புத்தகத்தில் அலுப்பில்லை. நமது எண்ணங்களைப் பற்றிய விரிவான அலசல் இருக்கிறது. ஆங்கில சுய முன்னேற்ற புத்தகங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் புகழ்பெறுவார்கள். தாத்தா காலத்தில் டேல் கார்னகியும் நெப்போலியன் ஹில்லும் மூலை முடுக்கெல்லாம் விற்றுக் கொண்டிருந்தார்கள். நம்ம காலத்திலும் அப்படி சக்கைப் போடும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஸ்டீபன் கோவி, எட்வர் டி போனோ, ரிச்சர்ட் கார்ல்ஸன் போன்றோரின் வரிசையில் சமீப காலத்தில் புகழ் பெற்றவர் ரோண்டா பைர்ன். ஆஸ்திரேலிய தொலைக்காட்சியில் பணிபுரிந்துவிட்டு இன்று புத்தக உலகில் மில்லியன்களில் பணத்தை அள்ளிக் கொண்டிருக்கிறார். அவர் இந்த சீக்ரெட் புத்தகத்தை 2007ல் எழுதி வெளியிட இன்றுவரை ஒரு கோடியே தொன்னூறு லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. அபாரமான விற்பனைதான். இது தமிழில் இரகசியம் என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் புத்தகத்தில்? வாழ்க்கை வெற்றிக்கான ரகசியம். இதுதான் எளிமையான பதில். இந்தப் புத்தகத்தின் அடிப்படைத் தத்துவம் நமது எண்ணங்கள். எண்ணங்களை மகிழ்ச்சியாக, உற்சாகமாக, ஆக்கப் பூர்வமாக வைத்துக் கொண்டால் வாழ்க்கை வெற்றிப் பாதையில் நடைபோடும் என்பதுதான். சுயமுன்னேற்ற புத்தகங்கள் பல எண்ணங்களைப் பற்றிதான் அதிகம் விவாதிக்கும். இதில் என்ன வித்தியாசம் என்றால் பல வெற்றிப் பெற்ற பிரபலங்களின் பார்வையில் எண்ணங்களை புதுமையாகச் சொல்கிறது. அலாவுதீனின் அற்புத விளக்கும் அடிமை பூதமும் கதையை சின்ன வயதில் நாம் படித்திருப்போம். அலாவுதீன் ஆணையிடுவதை அடிமை பூதம் நிறைவேற்றும். அதுபோல் நாம் மனதில் நினைத்து கேட்டாலே நாம் கேட்டது நடக்கும் என்ற இந்தப் புத்தகத்தில் சொல்லப்படுகிறது. கேளுங்க, நம்புங்க, பெற்றுக் கொள்ளுங்க என்கிறது இந்தப் புத்தகம். அதாவது நமக்கு என்ன தேவை என்பதை மிகத் தெளிவாக மனதில் நினைத்து கேட்க வேண்டும். கேட்பது என்றால் யாரிடம்? இந்த பிரபஞ்சத்திடம், சிக்கலாய் தோன்றுகிறதா? அத்தனை சிக்கல் இல்லை. மனதுக்குள் உங்கள் தேவையை நினைத்துக் கொள்ளுங்கள் போதும். அடுத்தக் கட்டம்தான் மிக முக்கியமானது அது நடக்கும் என்று துளிகூட சந்தேகப்படாமல் நம்புவது. மூன்றாவது மிக எளிது. அந்த நன்மையைப் பெற்றுக் கொள்வது. இது என்ன தமாஷா இருக்கு, மனசுல நினைச்சா நடக்குமா என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஏன், எப்படி, நடக்கிறது என்பதற்கு விரிவாக விளக்கமும் தந்திருக்கிறார்கள். ஈர்ப்பு விதி என்ற ஒன்றை நாம் அறிவியலில் படித்திருப்போம். இங்கேயும் அதைத்தான் சொல்லுக்கிறார்கள். நாம் எதை அடிக்கடி நினைக்கிறோமோ அதை நோக்கி ஈர்க்கப்பட்டு விடுவோம் என்று- அதனால் மனதில் நல்லதையே நினைத்துக் கொண்டிருந்தால் நல்லதே நடக்கும் என்கிறார்கள். நம்ம ஊர் பெரியவங்க சொல்வார்களே, நல்லதையே நினை என்று அதுதான் இது. பணம், உறவுகள், ஆரோக்கியம் என பல பிரிவுகளின் ரகசியத்தை இதில் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய பலம் அதன் எளிமையான டை. இந்த புத்தகத்தைப் படித்தால் என் வாழ்க்கை மாறி நாளையே நான் பில் கேட்ஸ் போல் பணக்காரனாகி விடுவேனா என்று கேட்பவர்களுக்கு (பொதுவாய் சுய முன்னேற்ற புத்தகங்கள் படிக்காதவர்கள் பிடிக்காதவர்கள் கேட்கும் கேள்வி இது) இல்லை. இந்தப் புத்தகம் பணக்காரனாக்குவது பற்றியல்ல, நீங்கள் விரும்புவதை அடைய உதவும் குறிப்புகள் அடங்கிய புத்தகம். அப்படியானால் நான் படித்தேன் என்றால் நினைத்ததையெல்லாம் அடைய முடியுமா என்று அடுத்தக் கேள்வி வரும். முடியும் என்று சந்தேகமில்லாமல் நம்புங்கள். முடியும் அதைத்தான் புத்தகம் சொல்லுகிறது, -ரஞ்சன். நன்றி: அந்திமழை, 26 அக்டோபர் 2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *