இலக்கியச் சித்தர்
இலக்கியச் சித்தர், முனைவர் கா. செல்லப்பன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 144, விலை 50ரூ.
நான் ஓர் ஆசிரியன், நம்பிக்கையோடு மனித குலத்தை உயர்த்தலாம் என்ற நம்பிக்கையே, என் வாழ்வின் அடிப்படை என்று வாழ்ந்த பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் ஒட்டுமொத்த இலக்கியப் பணிகளை மிகச் சுருக்கமாக, அதே வேளையில் மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் புலமைவாய்ந்த முனைவர் செல்லப்பன். உடல் உண்டு, ஆகவே வாழ்வதற்கு விஞ்ஞானம் தேவை. உள்ளமுண்டு. ஆகவே சமுதாயக் கலைகளும், அழகுக் கலைகளும், இலக்கியமும் தேவை. உயிருண்டு. ஆகவே தத்துவமும் சமயமும் தேவை என்று முப்பெரும் கல்விக் கூறுகளைப் பகுத்துக் கூறுகிறார். இவற்றுள் உடல் என அவர் கூறும் விஞ்ஞானத்தை மெய் அல்லது கிரியையாகவும், உள்ளம் என்று அவர் கூறுவதை இச்சையாகவும் உயிர் என்று அவர் கூறுவதை ஞானமாகவும் கொள்ளலாம். (15) இலக்கியத்தின் நோக்கம் நம்மை வாழ்வாங்கு வாழ வைப்பதுக்குத்தான்(28). படைப்பாளி, விமர்சகன், மொழிபெயர்ப்பாளர் ஆகிய மூன்று தன்மைகளையும் ஆய்வு செய்துள்ள நூலாசிரியர், இந்தப் படைப்பு, திறனாய்வு, மொழியாக்கம் சங்கமத்தால் அவர் ஓர் இறவாத இலக்கியச் சித்தராக என்றென்றும் வாழ்வார் என்ற கூற்று இதில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. -பின்னலூரான். நன்றி: தினமலர் 18/12/2011.