எதற்கு ஈழம்?
எதற்கு ஈழம்?, தீபச்செல்வன், தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே.நகர், சென்னை 78, விலை 175ரூ.
ஈழம் என்பது பல ஆண்டுகளாகப் போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல, முப்பதாண்டு போரில் வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான் என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அதே வேளையில் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகள் நடந்துகொண்டவிதமும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தும் சூழல் உருவானது தொடங்கி உள்நாட்டுப போர் முடிவுக்கு வந்த பின்னரும் இன்று வரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி விவரிக்கப்பட்டுள்ள விதம், நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது. நூலாசிரியர் இலங்கையில் இருந்து நிகழ்வுகளை கவனித்து எழுதி இருப்பதால், உண்மை நெருப்பாய் சுடுகிறது. தூய தமிழ் நடை சிறப்புக்குரியது. நன்றி: தினத்தந்தி 8/5/2013.
—-
சிறு கை நீட்டி, இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான், இளம்பிறை பதிப்பகம், 14/23, வஹாப் தெரு, சூளைமேடு, சென்னை 94, பக். 140, விலை 100ரூ.
கதை சொல்லும் உத்தி, நேர்த்தியில் கூட சிறுகதைகள் உன்னதமான இடத்தைப் பெறும் என்பதற்கு ஈழத்து எழுத்தாளர் எம்.ஏ.ரஹ்மானின் கதைகள் உதாரணம். சிறு கை நீட்டி என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆறு கதைகளும் ஒவ்வொன்றும் ஒரு நாவலுக்கான பரப்பைக் கொண்டவை. பூ கதையில் வரும் கல்யாணியின் மாறுபட்ட நடத்தை, யானையில் எத்தனை பணம் சம்பாதித்தாலும் தன் ஒரே மகனை சரியாக வளர்க்க முடியாத தந்தையின் இயலாமை, புத்தமத தத்துவத்தைச் சொல்லும் தானம், சத்தியாகிரகம் என்பது என்ன என விளக்கும் உண்மையில் உறுதி, எத்தனை இடர் வந்தாலும் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து விலகாத ஈமான் கதை, சிறு கை நீட்டி கதையின் சதாசிவத்தாரின் பாத்திரவடிப்பு என்று ஒவ்வொரு கதையும் ஒரு உத்தியில் படைக்கப்பட்டுள்ளது. நன்றி: குமுதம், 15/5/2013.