இலக்கிய மரபியல்
இலக்கிய மரபியல், கி. இராசா, பார்த்திபன் பதிப்பகம், திருச்சி 21, பக். 504, விலை 350ரூ.
இலக்கிய ஆய்வில் பொதுவாக இலக்கிய மரபு என்ற வழக்கு உண்டு. இலக்கிய மரபியல் என்ற வழக்கு இதுகாறும் இல்லை. இலக்கிய மரபு என்பது வேறு. இலக்கிய மரபியல் என்பது வேறு. இலக்கிய மரபு (Literary Genetics) என்பது இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தது. இதனை இலக்கியப் பரிணாமம் (Evolution lf Literature) என்றால் சட்டென விளங்கும். இந்த இலக்கியப் பரிமாணத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற இலக்கிய மரபுக் கூறுகள் பற்றிய ஆய்வுதான் இலக்கிய மரபியல் என இலக்கிய மரபுக்கும் இலக்கிய மரபியலுக்கும் உள்ள வேறுபாட்டை சுருங்கச் சொல்லி விளங்க வைத்து, தன் ஆய்வை மேற்கொண்டுள்ளார் நூலாசிரியர். இலக்கியமும் ஒர் உயிரிதான். உயிரியைப் போன்று இலக்கியத்துக்கும் தோற்றம், வளர்ச்சி, மலர்ச்சி, தளர்ச்சி உண்டு என்றும், இத்தகு இலக்கிய வளர்ச்சிகளையும், புறத்துறைகளையும் அடிப்படையாகக் கொண்டும், இத்துறைகளுக்க எழுதப்பட்ட இலக்கியச் சான்றுகளைக் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலக்கியமும் அறிவியலும் சூழலும் இலக்கிய வளர்ச்சியும் வகைகள், உருவாக்கம், வளர்நிலைகள், அக, புற இலக்கியங்களின் வளர்ச்சி, கோவை, உலா, தூது, பிள்ளைத்தமிழ், ஆற்றுப்படை, கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன. இலக்கியங்கள் எந்தச் சூழலில் எப்படி, ஏன், தோன்றின? என்னும் பல கேள்விகளுக்கு இந்நூல் விடையளிக்கிறது. சான்று நூல்கள் பற்றியி விவரம் அட்டவணைக்குறிப்பு, வரைபடங்கள் போன்றவற்றை இணைத்திருப்பது நூலின் தனிச்சிறப்பு. நன்றி: தினமணி, 4/3/2013.
—-
மோட்டிவ் 6, விகாஸ் ஸ்வரூப், தமிழில்-அஞ்சனா தேவ், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 140ரூ.
ஸ்லம் டாக் மில்லியன் கதைகயை புத்தகமாக எழுதிய விகாஸ் ஸ்வரூப் எழுதியுள்ள ஆங்கில மர்ம நாவல், சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ். இந்த நாவலை தமிழில் அஞ்சனா தேவ் மொழிபெயர்க்க ஜுனியவர் விகடன் வார இதழ் மோட்டிவ் 6 என்ற பெயரில் தொடராக வெளியிட்டது. பெரும் பணக்காரரும் அரசியல்வாதியுமான ஒருவரின் மகன் விவேக் விக்கிராய். கெட்ட குணங்களின் மொத்த வடிவமாக திகழ்கிறான். விருந்து நிகழ்ச்சி ஒன்றில் விவேக் சுட்டுக்கொல்லப்படுகிறான். அந்த விருந்துக்கு வந்தவர்களில் 6பேர் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். இதில் விவேக்கின் தந்தையும் ஒருவர். விவேக்கை கொன்றது யார்? என்பதை அரசியல், சமூக அவலங்களுடன் கலந்து விறுவிறுப்பான கதைக்களமாக அமைத்திருக்கிறார் ஆசிரியர். ஆங்கில நாவலின் தமிழாக்கம் என்று நினைக்க இயலாதபடி தமிழில் திகில் நிரம்ப எழுதி இருக்கிறார் அஞ்சனா தேவ். நன்றி:தினத்தந்தி, 22/2/2012.