இலங்கைத் தமிழர் வரலாறு
இலங்கைத் தமிழர் வரலாறு, தந்தி பதிப்பகம், சென்னை, விலை 360ரூ.
வரலாற்றுச் சுவடுகள் நெடுந்தொடர் தினத்தந்தியில் வெளியானபோது அதில் ஒரு பகுதியாக, இலங்கைத் தமிழர் வரலாறு இடம் பெற்றுள்ளது. அது வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை நூலாக வெளியிட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்களும், வாசகர்களும் விரும்பினார்கள். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இப்போது இலங்கைத் தமிழர் வரலாறு 576 பக்கங்கள்கொண்ட வண்ண நூலாக மலர்ந்துள்ளது. சங்க காலத்தைச் சேர்ந்த கரிகால் சோழன் முதல் பிற்கால சோழர்களின் மாமன்னராகத் திகழ்ந்த ராஜேந்திர சோழன் வரை இலங்கைத் தீவை ஆண்ட பெருமை மிகு வரலாற்றை இந்த நூல் எடுத்துரைக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதையும், அதை எதிர்த்து தமிழர்கள் அறவழியில் போராடியதையும் இந்த நூல் விவரிக்கிறது. வெலிக்கடை சிறையில் சிங்களர்கள் வெறியாட்டம். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் நடந்த போராட்டங்கள். முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களுக்குச் செய்த உதவிகள். பிரதமராக இருந்த இந்திரா காந்தி இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள். அதேபோல கலைஞர் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பு நடத்திய போராட்டங்களை இந்த நூல் கூறுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் ஜெயலலிதா பல தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார். அதுபற்றியும் இந்த நூல் கூறுகிறது. ராஜீவ் காந்தி படுகொலை, தளபதி கிட்டு தற்கொலை போன்ற துயர நிகழ்ச்சிகளையும் இந்த நூல் பதிவு செய்ய தவறவில்லை. இதன் பின்னர் ராஜபக்சே தலைமையில் போர் மூண்டதையும், 4 கிலோ மீட்டர் பரப்பளவில் விடுதலைப்புலிகள் முடக்கப்பட்டதையும், போரின் இறுதிக் கடத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவருடைய மகன் சார்லஸ் அந்தோணி கொல்லப்பட்டதையும், பிரபாகரனின் 12 வயது மகனை சிங்கள ராணுவம் மனித நேயமின்றி சுட்டுக் கொன்றதையும் இந்த நூல் கூறுகிறது. இது குறித்து உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வழங்கிய அணிந்துரையில், தினத்தந்தி வழங்கியுள்ள இந்த நூல் வரலாற்றுக் கருவூலமாகும். மிகவும் நேர்த்தியாகவும், ஏராளமான படங்களுடனும் கண்ணைக் கவரும் விதத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டிருப்பது, தினத்தந்தி இதழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று அறிஞர்கள் பலரைக் கொண்ட குழுவை அரசோ அல்லது பல்கலைக்கழகங்களோ நியமித்து அக்குழு பலமாத காலம் உழைத்து எழுத வேண்டிய இலங்கை தமிழர் வரலாற்றைச் சிறப்பாகத் தொகுத்துத் தந்திருப்பது தினத்தந்தி நாளிதழின் மகுடத்தில் மேலும் ஒளி வீசும் மணிக்கற்களைப் பொதிந்துள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 16/7/2014.