இஸ்லாமியக் கலைப்பண்பு

இஸ்லாமியக் கலைப்பண்பு, முஹம்மது மர்மடியூக் பிஃக்தால், தமிழில் ஆர்.பி.எம்.கனி, யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 208, விலை 100ரூ.

இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக்கொள்ள வெளியாகியுள்ள பல அரிய நூல்களில் இந்நூலும் ஒன்று. இஸ்லாத்தில் வகுத்துள்ள வாழ்க்கை நெறிகள், எவ்வாறு எக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும், உலக மேம்பாட்டுக்கு இஸ்லாம் எப்படி ஜீவசக்தியாய் வழிகாட்டுகிறது என்பதைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. பல இடங்களில் புனித குர்ஆனுடைய வசனங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்கு விளக்கமும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கப் பிறந்த நூலாசிரியர், பல இஸ்லாமிய நூல்களைப் படித்து ஆய்வு மேற்கொண்டும், பல இஸ்லாமியர்களுடன் பழகி அவர்களது வாழ்க்கை நெறிமுறைகளால் கவரப்பட்டும் இஸ்லாத்தை தழுவினார். 1927ஆம் ஆண்டு அவர் ஆங்கிலத்தில் இஸ்லாமிய கலைப்பண்பு, வெற்றி தோல்வியின் காரணங்கள், சகோதரத்துவம், விஞ்ஞானமும் கலையும், சகிப்புத்தன்மை, விதிவச நம்பிக்கைக் குற்றச்சாட்டு, ஆண் பெண் உறவு நிலை, இஸ்லாத்தின் நகரம் ஆகிய தலைப்புகளில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புதான் இந்நூல். மொழிபெயர்ப்பு எளிமையாக உள்ளது. நன்றி: தினமணி, 8/9/2014.  

—-

நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், மதுரை, பக். 176, விலை 140ரூ.

எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்தத் துறையில் அவர் முத்திரை பதிக்க பேச்சுத்திறனே பயன்பட்டது. உலகில் சாதனை படைத்தவர்கள் அத்தனை பேரும் தங்கள் எண்ணங்களை பேச்சாற்றல் மூலம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த செய்திகளையெல்லாம் தாங்கி, அவையடக்கத்துடன் எப்படிப் பேசுவது, அவையை அடக்கி எப்படி பேசுவது, கூச்சம், பதற்றம், கவனச்சிதறல் இல்லாமல் பேசுவது எப்படி? போன்ற தகவல்களை பேச்சுக்கலையின் தோற்றம் வளர்ச்சியுடன் பல நல்உதாரணங்களுடன் உங்களுக்குச் சொல்லித்தரும் நூல். நன்றி: குமுதம், 17/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *