உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1)
உபநிஷதச் சிந்தனைகள் (பகுதி 1), கே.எஸ். சந்திரசேகரன், ஓம் முருகாஸ்ரமம், பக். 80,விலை 30ரூ.
வேதங்கள் என்றால் அறியப்பட்டது எனத் துவங்கும் இந்நூல், வேதாந்த கருத்துக்கள், மனிதனின் வாழவில் ஒவ்வோர் நிலையிலும் சிறப்பாக வாழ வழிவகுக்கும் உன்னதமான கருத்துக் கருவூலம் என, உரைக்கிறது. பிரதானமாக கருதப்படும் 10 உபநிஷத்துகளில், கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த, கட மற்றும் தைத்திரீய உபநிஷத்துகளின் கருத்துக்களை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. வாஜஸ்ரவசின் மகனாக விளங்கும் நசிகேதன் என்ற பாலகனுக்கு எமதர்ம ராஜன் மூன்று வரங்களை அளிக்கிறார். அந்த மூன்று வரங்களை பெற்றுக்கொள்ள மூன்று கேள்விகளை நசிகேதன் கேட்கிறான். அக்கேள்விகளுக்கான எமதர்மராஜனின் பதில்களே கடோபநிஷதத்தின் மையக் கருத்தாக அமைகிறது. தைத்திரீய உபநிஷதம் யாக்ஞ்யவல்க்யர் என்ற அறிஞருக்கு அவரது குருவால் உபதேசிக்கப்பட்டது. இவ்விரு உபநிஷதச் சிந்தனைகளை விளக்கும் தருவாயில் நூலாசிரியர் ஆங்காங்கே திருவள்ளுவர், அவ்வையார், அருணகிரிநாதர், திருமூலர் ஆகியோரின் தமிழ்ப் பாடல்களை மேற்கோள்காட்டி உள்ளார். சில இடங்களில் இன்னும் தெளிவான விளக்கங்களை வழங்கி இருக்கலாம். -பை.சிவா. நன்றி: தினமலர், 16/8/2015