உ.வே.சா.வின் உரைநடை நூல்கள்

உ.வே.சா.வின் உரைநடை நூல்கள், உ.வே.சாமிநாத அய்யர் நூலகம் வெளியீட்டகம்.

அடமானத்தில் சங்கராபரணம் உ.வே.சாமிநாத அய்யர் நூலகம் வெளியிட்ட, உ.வே.சா.வின் உரைநடை நூல்கள் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். கடந்த சில ஆண்டுகளாக, இந்நூலின் மறுபதிப்பு வெளியாகவில்லை என்பது கவலைக்குரியது. இன்றைய இளைய சமூகத்துக்கு, இந்த நூல் அரிய பொக்கிஷம். தஞ்சைப் பகுதியில் வாழ்ந்தவர் சங்கராபரணம் நரசய்யா. சங்கராபரணம் ராகத்தில் வல்லமை பெற்றவர். பண நெருக்கடி ஏற்படவே, செல்வந்தராக இருந்த, கபிஸ்தலம் மூப்பனாரிடம் கடன் கேட்கிறார் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கே. வாசனின் மூதாதையர்கள்). கடனுக்காக, எதை அடமானம் வைக்கிறாய்? என நரசய்யாவிடம், மூப்பனார் கேட்க, என் உயிர் மூச்சான சங்கராபரண ராகத்தை அடமானம் வைக்கிறேன். கடனை திருப்பிக் கொடுக் கும் வரை, சங்கராபரண ராகத்தைப் பாட மாட்டேன் என்கிறார். அதையேற்று 100 பொற்காசுகளை, மூப்பனார் கடன் தருகிறார். விழாக்களில், நரசய்யாவும், சங்கராபரணம் ராகத்தை பாடாமல் இருந்தார். திருச்சியில் செல்வந்தராக இருந்த வாலிஸ் அப்பராயர் வீட்டு விழாவில் நரசய்யா பாடுகிறார். அவரை சங்கராபரணம் பாடும்படி அப்பராயர் கேட்கிறார். சிக்கலை சொல்கிறார் நரசய்யா. உடனே மூப்பனாரிடம் நரசய்யா வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க அப்பராயர் ஏற்பாடு செய்கிறார். மூப்பனாரோ என்னிடம் உதவி கேட்காமல், நரசய்யா கடன் கேட்டதால், நானும் விளையாட்டாக அடமானம் கேட்டேன். வாய்மொழியாக கொடுத்த உறுதியை தவறாமல் கடைப்பிடித்த மாமனிதன் நரசய்யா என கூறி, அவர் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து, பரிசும் அளிக்கிறார் மூப்பனார், என, உ.வே.சா.வின் தகவலும் உரைநடையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இதேபோல் நீதிபதி முத்துசாமி அய்யர் பற்றி எழுதியுள்ளார். தமிழர்களில் முதல் நீதிபதி இவர். இவரை சின்ன வயதில் உணவிட்டு ஆதரித்தவர் ஒரு பெண். இவர் நீதிபதி ஆனதும், இவரைப் பார்க்க வருகிறார். பல முக்கியஸ்தர்கள் மத்தியில் இருந்தவரை எப்படி சந்திப்பது என தயங்குகிறார். அப்போது அவரது உதவியாளர், மூதாட்டியிடம் விசாரிக்கிறார். அவரிடம் விவரம் சொல்கிறார். உதவியாளர் முத்துசாமி அய்யரிடம் தகவலை சொன்னதும், முத்துசாமி ஐயர் மளமளவென வெளியில் வந்து, இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு மூதாட்டியின் காலில் விழுந்து வணங்குகிறார், இதைப் பார்த்த முக்கியஸ்தர்கள் வியந்து நிற்கின்றனர். மூதாட்டையை தன்னுடன் இருக்கும்படி, அய்யர் மன்றாடுகிறார். அவரோ, உன்னைப் பார்த்ததே போதும் என சென்றுவிடுகிறார். இதுபோன்ற சுவையான பல தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன நன்றி: தினமலர், 26/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *