என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை 5, பக். 184, விலை 150ரூ.
ஆண்டாள் அளித்த வாசகம் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது. ஆன்மரீதியாக இறைவனுடன் கட்டுண்ட அடியார்களுக்கு நேரும் சிலிர்க்கும் அனுபவங்களை உணர்பவர்கள் இப்படியே கூறுவர். இநத் நூலில் அப்படிப்பட்ட சிலிர்க்கும் ஆன்ம அனுபவக்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆன்மிக மாத இதழில் எழுதப்பட்ட 20 கட்டுரைகளின் தொகுப்பு நூலான இதில், ஆண்டாளைப் பற்றிய கட்டுரையுடன் துவங்குகிறது. குரு ராகவேந்திரர் வாழ்க்கை, திருக்கச்சி நம்பிகளும் வரதராஜப் பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணர், ஜாம்பவானின் சயமந்தக மணி குறித்த கதைகள், தர்மரை வியக்க வைத்த கீரிப்பிள்ளையின் தர்மோபதேசம் என இதிகாச புராணக் கதைகளுடன், பக்தர்களின் வாழ்வியல் சம்பவங்களும் எளிய நடையில் படிக்க சுவாரஸ்யத்தையும் பக்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நாமக்கல் நாமகிரித் தாயார் நிகழ்த்திய அற்புதங்கள், கணித மேதை ராமானுஜம் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்கள் ஆகியவை ஆன்மிக அன்பர் மனத்தில் நம்பிக்கை ஊட்டுபவை. காஞ்சி மகாபெரியவர் சொன்ன அருளுரை, சுகானந்தர் என்பவரின் இறையருள் பெற்ற அனுபவம் ஆகியவற்றை படிக்கும்போது எழுத்து நடை நம்மை வசீகரித்து இருத்துகிறது. அறிந்த கதைகளாக சில இருந்தாலும் அதனை நூலாசிரியர் கூறும் விதம் சிறப்பு ஆன்மிக அனுபவம் பெற விழைவோருக்கு நல்ல வாசிப்பு இந்த நூல். நன்றி: தினமணி, 13/5/2013
—-
அறிஞர்களின் பார்வையில் ம.பொ.சி., ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், டாக்டர் ம.பொ.சி. அறக்கட்டளை, 4/344, ஏ.சீ.செல்அவென்யூ, அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, பக். 144, விலை 75ரூ.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை, அவரது மகள் மாதவி பாஸ்கரன், எளிய நடையில் படைத்து தந்துள்ளார். அத்துடன் ம.பொ.சி.யைப் பற்றி பல்வேறு அறிஞர்களும், கலைஞர்களும் எழுதிய கட்டுரைகளையும் தொகுத்துத் தந்துள்ளார். ம.பொ.சி.யுடன் பல்வேறு தலைவர்களும் திரைப்பட, நாடகக் கலைஞர்களும் இணைந்திருக்கும் நிழற்படங்களையும், குடும்பப் படங்களையும் இந்நூல் அழகாக அச்சிட்டுத் தந்துள்ளது. தலையைக் கொடுத்தேனும், தலைநகரைக் காப்போம் என்று அவர் போராடி, சென்னையைத் தக்க வைத்ததையும், வேங்கடத்தை விட மாட்டோம் என்று வேங்கடத்துக்கு முயன்று திருத்தணி வரை பெற்றுத் தந்ததையும் உணர்த்தும் முழக்கங்களும், இந்நூலில் இடம் பெற்றுள்ளன. -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 25/12/2011