எமனின் திசை மேற்கு

எமனின் திசை மேற்கு, லயன் முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி, விலை 100ரூ.

கதையின் புதிய வடிவங்கள் கிராபிக் நாவல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானவை. காமிக்ஸ் சட்டகங்களைத் தாண்டிச் சற்று விரிவாக, ஆழமாகக் கதை சொல்பவை. தொடராக இல்லாமல், ஒரே புத்தகத்தில் கதை முடியும் வகையில் உருவாக்கப்படுவது என்பதுதான் காமிக்சுக்கும் கிராபிக் நாவலுக்கும் இடையில் உள்ள முக்கிய வித்தியாசம். நம் நாட்டில் காமிக்ஸ் என்றாலே, அவை சிறுவர்களுக்கானவை என்ற எண்ணம் வலுப்பட்டுவிட்டது. சாகசம் என்பதைத் தாண்டி தொலைதூர நாடுகளின் அரசியல், போர், இனநிறவெறி என்று பல்வேறு விஷயங்களைப் பற்றிய சித்திரத்தை வாசகனின் மனதில் வரையும் ஆற்றல் கொண்டவை காமிக்ஸ் புத்தகங்கள். கூடவே மொழிபெயர்ப்பு மூலம் அந்நிய நிலம் மற்றும் வாழ்வு முறை சார்ந்த புதிய வார்த்தைகளையும் தரவல்லவை. ஓவியர்களுக்குக் கற்பனை வளம், நுணுக்கம் போன்றவற்றை அள்ளித் தருபவை. எல்லாவற்றுக்கும் மேலாக, கைக்கு அடக்கமான விலையில் கிடைக்கின்றன. காமிக்ஸ் வாசகர் வட்டம் சிறியது என்றாலும் அடர்த்தியானது. தமிழில் காமிக்ஸ்கள் குறிப்பிடும்படியான எண்ணிக்கையில் இருந்தாலும் கிராபிக் நாவல்களில் அரிது. தமிழ் காமிக்ஸ் உலகில் சாதனை புரிந்துவரும் முத்து காமிக்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள கிராபிக் நாவல் எமனின் திசை மேற்கு. 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா கண்ட அசுர வளர்ச்சியின் பின்னணியில் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் மீது  கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை, குடியேறிகள் மீது செவ்விந்தியர்கள் நடத்திய தாக்குதல்கள் என்று பல்வேறு தகவல்களின் பின்னணியில் ஒரு சிக்கலான காதல் கதையுடன் வண்ணப் புத்தகமாக வெளியாகியுள்ளது. காணாமல்போன சிறுவன் கழுத்தில் அணிந்திருக்கும் குடும்ப டாலரை வைத்து அடையாளம் காணப்படும் ஆதிகாலத்துக் கதைதான். ஆனால் எழுதப்பட்ட விதமும் சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்களும் ஓவியங்களும் வழக்கமான காமிக்சில் இருந்து கிராபிக் நாவலை எளிதாக வேறுபடுத்திவிடுகின்றன. ஒருகையை இழந்திருந்தாலும் துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவனான நாயகன், சிறுவயதில் செவ்விந்திய வேடமிட்ட சிறுவன் தன் தந்தையை கொல்ல முயன்ற பயங்கர நினைவை சுமந்து வாழும் பணக்கார நாயகி, வங்கிக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் உள்ளூர் ஷெரீப் ஆகியோர் கதையின் முக்கியப் பாத்திரங்கள். வாழ்வின் புதிரான பக்கங்களை ஒரு திரைப்படத்துக்குரிய கதையம்சத்துடன் மிக நேர்த்தியாகச் சொல்கிறது நாவல்.. கதை முழுவதும் நாயகனின் வார்த்தைகளாலேயே விவரிக்கப்படுகிறது. பிரெஞ்சு காமிக்ஸ் உலகின் தயாரிப்பு இது. வேற்றுமொழி காமிக்ஸ்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது ஏற்படும் சிரமங்களை அனுமானிக்க முடியம். மூலத்தில் நீண்ட வசனங்கள் இருந்ததாகவும் மொழிபெயர்ப்பு பெரிய சவாலாக இருந்ததாகவும் ஆசிரியர் விஜயன் குறிப்பிடுகிறார். அவரது கடும் உழைப்பு நாவலில் தெரிகிறது. நன்றி: தி ஹிந்து, 6/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *