எழுத்து இதழ்த் தொகுப்பு
எழுத்து இதழ்த் தொகுப்பு, சி.சு.செல்லப்பா படைப்புகள், தொகுப்பு கி.அ. சச்சிதானந்தன், சந்தியா பதிப்பகம், சென்னை.
முன்னோடியின் முகம் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் சி.சு.செல்லப்பா. தன் வாழ்நாள் முழுவதையும், இலக்கியத்துக்காகச் செலவிட்டார். அவர் நடத்தி வந்த எழுத்து இதழைச் சிற்றிதழ்களின் முன்னோடி எனச் சொல்லலாம். எழுத்து இதழைத் தொடர்ந்து தான் அதன் மூலம் அறிமுகமானவர்களால், நடை, பிரக்ஞை, கசடதபற, யாத்ரா போன்ற இதழ்கள் தமிழ் இலக்கியத்துக்காக மலர்ந்தன. க.நா. சுப்ரமண்யத்தின் சமகாலத்தவரும் அவரின் நேர் எதிர் இலக்கியக் கோட்பாட்டாளராகவும் சி.சு.செ. இருந்தார். க.நா.சு-வும் எழுத்து இதழில் எழுதியிருக்கிறார். சி.சு.செ. இலக்கிய விமர்சனத்துக்காகத்தான் இந்த இதழைத் தொடங்கியுள்ளார். பிறகு, அது புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. நா. பிச்சமூர்த்தி, வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, சி.மணி போன்ற முன்னோடிக் கவிகள் எழுத்து மூலம்தான் அறிமுகமானார்கள். புதுக்கவிதை பரவலான கவனத்துக்கு வராத காலகட்டத்தில் புதுக்கவிதைகளை வெளியிட்டுப் பண்டிதர்களின் பகையைச் சம்பாதித்தார். முதலாளித்துவத்தின் விற்பனையாளன் என கம்பூனிஸ்ட்டுகளும் தாக்கியுள்ளனர் என இந்த நூல் தொகுப்பாளரும் எழுத்தாளருமான கி.அ.சச்சிதானந்தன் முன்னுரையில் கூறுகிறார். ஆனால் பேருறுதி கொண்ட சி.சு.செ.தான் மேற்கொண்ட பணியிலிருந்து விலகவில்லை, எழுத்து இதழில் வெளிவந்த அவரது கட்டுரைகள், அவரது உழைப்புக்குச் சாட்சியாக இருக்கின்றன. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூலை கி.அ.சச்சிதானந்தன் பதிப்பித்துள்ளார். அவர் நல்கியுள்ள முன்னுரையில், நவீனத் தமிழ் இலக்கியத்தின் முகம் தெளிவாகப் புலனாகிறது. -சுந்தர லட்சுமி. நன்றி: தமிழ் இந்து, 3/1/2015.