ஏற்றுமதி இறக்குமதி வணிகம்
ஏற்றுமதி இறக்குமதி வணிகம், ஜஸ்டின்பால், ராஜீவ் அசேர்கர், தமிழில் லயன் எம். சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக். 255, விலை 250ரூ.
வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதிவகரமான வழிமுறைகள், தகவல்கள் அடங்கிய நூல். வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும், ஏற்றுமதி தொடங்குவதற்கு முன்னர் பதிவு செய்தல், சர்வதேச வர்த்தகத்தில் பொதுவாக அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் முதற்கொண்டு பல அடிப்படை விவரங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. சர்வதேச வர்த்தக் கலைச்சொற்களான இன்கோடெர்ம்ஸ் உள்ளிட்ட விவரங்கள், கடுமையான போட்டியும் சிக்கலும் நிறைந்த ஏற்றுமதித் தொழில் குறித்து சில அடிப்படை விவரங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ள இந்நூல், ஆங்கிலத்தில் 2008-ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. சில மேற்கோள்கள் 2006, 2007-ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் இன்றைய தேதியில் இந்நூல் நடைமுறைக்கப் பொருந்துமா? என்று யோசிக்க வேண்டிய விஷயம். ஒரு நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தியான பொருள்களின் உள்நாட்டுப் பயன்பாடு ஆகியவற்றோடு முடிவதில்லை. வெளிநாடுகளில் பொருள்களை விற்பனை செய்து விலை மதிக்க முடியாத அந்நியச் செலாவணியை ஈட்டுவது அதற்கடுத்த மிக முக்கியமான கட்டமாகும். அதன் நடைமுறைச் சட்டங்களும் விதிமுறைகளும் ஏராளமான மாறுதல்களுக்கு உட்பட்டவை. சர்வதேச வர்த்தகம் என்ற விஷயம் இந்த ஒரு புத்தகத்துக்குள் அடங்கிவிடாது. சில அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள இப்புத்தகம் உதவக்கூடும். ஆனால் காலந்தோறும் மாற்றத்துக்கு உள்ளாகி வரும் ஏற்றுமதி-இறக்குமதி சட்ட – விதிமுறைகளை நிபுணர்களின் உதவியைக் கொண்டு கையாண்டு, தொழிலில் ஈடுபட வேண்டும். நன்றி: தினமணி, 17/8/2015.