ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம்
ஏவி.எம்.ஒரு செல்லுலாய்டு சரித்திரம், டிஸ்கவரி புக் பாலஸ், சென்னை, விலை 200ரூ.
தமிழ் சினிமாவை, உலகத்தரத்துக்கு உயர்த்தியவர்களில் முக்கியமானவர் ஏவி.எம். மெய்யப்ப செட்டியார். ஏவி.எம். பேனரில் முதல் படம் நாம் இருவர். காரைக்குடியில் சாதாரண நாடகக் கொட்டகையில் தயாரிக்கப்பட்டு, சாதனை படைத்தது. படம் சிறப்பாக அமைவதற்காக செலவைப்பற்றி கவலைப்படமாட்டார். பாட்டு, நடனம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட அந்தநாள் படத்தில் முதலில் கதாநாயகனாக நடித்தவர் கல்கத்தா விஸ்வநாதன். படம் பாதிக்குமேல் எடுக்கப்பட்டபிறகு அதைப் பார்த்த ஏவி.எம்.முக்கு திருப்தி இல்லை. இதுவரை எடுத்ததை தூக்கிப் போட்டுவிட்டு, சிவாஜிகணேசனை கதாநாயகனாக வைத்துப் படத்தை மீண்டும் எடுங்கள் என்றார். டைரக்டர் எஸ்.பாலசந்தருக்கு (வீணை பாலசந்தர்) ஒரே அதிர்ச்சி. செட்டியாருடன் போராடிப் பார்த்தார். ஏவி.எம். தன் முடிவில் உறுதியாக இருந்தார். எனவே சிவாஜியை வைத்து படம் மீண்டும் எடுக்கப்பட்டது. அதுதான் நாம் எல்லாம் பார்த்து ரசித்த அந்தநாள். இப்படி ஏவி.எம். வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களை எல்லாம் கதை போல சுவாரசியமாகக் கூறுகிறார் ஏவி. மெய்யப்ப செட்டியாரின் புதல்வரும், ஏவி.எம். சரவணனின் மூத்த சகோதரருமாகிய ஏவி.எம். குமரன். இந்தப் புத்தகத்தைப் படித்தால் தமிழ்ப்பட உலகின் பொற்காலத்தை அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 5/11/2014.