ஒன்றே உலகம்
ஒன்றே உலகம், தனிநாயக அடிகள், தமிழ்ப் பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 264, விலை 170ரூ.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய தனிநாயக அடிகளாரின் சுற்றுப் பயணத்தில் கிடைத்த அரிய தகவல்களை எழுத்து வடிவில் கொண்டு வந்த நூலே ஒன்றே உலகம். இலங்கையில் பிறந்த அடிகளார் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தமிழ் குறித்து சொற்பொழிவுகளை நடத்தி தமிழின் இனிமையை உலகறியச் செய்துள்ளார். கிழக்கு ஜெர்மனியின் டாக்டர் லேமன் சீர்காழியில் ஏழாண்டுகள் தங்கி தமிழ் ஆராய்ச்சி மேற்கொண்டது. திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்த அறிஞர்கள், பிரான்ஸ் தேசிய நூற்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான தமிழ் ஏடுகள், கையெழுத்துப் பிரதிகள், போர்த்துக்கீசியத்திலிருந்து தமிழகம் வந்த குருக்கள் என்று சுற்றுப்பயணத்தில் கண்ட பல அரிய தகவல்களை இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது. தாய்லாந்து மன்னர்களின் முடிசூட்டு விழாவின்போது திருவாசகம் ஓதப்படுவதையும், கம்போடியக் கோயில்களில் திராவிடக் கலைத்தாக்கம் காணப்படுவதையும் அடிகளார் மேற்கோள் காட்டியுள்ளது தமிழின் பெருமையை உணர்த்துவதாக உள்ளது. அமெரிக்காவில் சேலம், தில்லி பெயர்களைக் கொண்ட ஊர்கள், நாடகங்களின் மூலம் இலக்கிய அறிவை வளர்க்கும் ஆங்கிலேயர்கள், தோட்டங்களிலும் கோதுமை நிலங்களிலும் காணப்படும் பிரெஞ்சு நாட்டின் அழகு என்று பல தகவல்களைப் படிக்கையில் நம்மை அறியாமலேயே மனம் பயணம் மேற்கொள்கிறது. பல்வேறு நாடுகளில் உள்ள பண்பாடு, பழக்க வழக்கங்கள், விருந்தோம்பல் முறை, வேளாண் மக்கள் வரலாற்றின் மாண்பைக் காப்பது என அனைத்தையும் பதிவு செய்து, பிரயாணம் என்பது வெற்றுச் செலவல்ல. அறிவையும் பல நாட்டவர்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்ளும் முயற்சி எனும் ஆசிரியரின் கூற்று கவனத்தில் கொள்ள வேண்டியது. நன்றி: தினமணி, 3/62013.
—-
சௌபாக்கியம் அளிக்கும் ஸ்ரீ சனிஸ்வர பகவான், ஹநுமத்தாசன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி. கோயில் தெரு, திருமலா ஃப்ளாட்ஸ், ஸ்ரீ ராகவேந்திர மடம் எதிரில், திருவல்லிக்கேணி, சென்னை 5. பக். 96, விலை 60ரூ.
ஸ்ரீ சனி பகவானின் சிறப்பு, ஸ்ரீ அனுமனும் ஸ்ரீ ஆஞ்சநேயரும், ஸ்ரீ சனீஸ்வர வழிபாடு, அஷ்டோத்திர சத நாமாவளி, ஸ்ரீசனைச்சர சகஸ்ரநாம ஸ்தோத்திரம் என ஸ்ரீ சனீஸ்வரரின் குணங்களையும் அவர் நமக்கு வாரி வழங்கும் பலன்களையும் தெளிவுறத் தந்துள்ளார் நூலாசிரியர். நன்றி: சக்தி விகடன், 8/1/2013.