ஒரு கொத்து அகம்
ஒரு கொத்து அகம், நீலமணி, திலகம் பதிப்பகம், 17இ, பி1, குமரன் குடியிருப்பு, கே.கே. பொன்னுரங்கம் சாலை, ஓம் சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை 87, பக்கங்கள் 222, விலை 110ரூ.
சங்க இலக்கிய நூல்களில் புறம் போரின் வீரக்கதைகளை விவரிக்கும் என்பதும், அகம் தமிழரின் காதல் வாழ்வை கவிநயம் சொட்டச் சொட்ட விவரிக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே. பாண்டியன் உக்கிரப் பெருவழுதியின் ஆதரவுடன் உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மர் தொகுத்த அகநானூறு நூலில் இருநூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஒரு புது முயற்சியாக இந்நூலாசிரியர் புதுக்கவிதை வடிவில் அவற்றை எழுதியுள்ளார். எளிய சொற்களில், இனிய காதல் உணர்வுகைள வெளிப்படுத்தும் அருமையான கவிதைகள். பின் இணைப்பில், அகநானூறில் குறிப்பிடப்படும் இடப்பெயர்கள், மாந்தர், விலங்கினம், செடி கொடிகள், கடவுளர் மற்றும் விழாக்கள், சிறப்பு கருத்துகள் ஆகியவற்றை தொகுத்தளித்துள்ளது மெச்சும்படி உள்ளது. – பரமன் கைலாஷ்.
—-
வடநாட்டு கோயிற்கலைகள், பெருந்தச்சன், கோ. வீரபாண்டியன், வேலா வெளியீடு, 33, பி பிளாக், பிரகாசம் தெரு, சென்னை 17, பக்கங்கள் 356, விலை 260ரூ.
தமிழுலகில் த.கே.வேந்தன் அவர்களை அறியாதவர் இருத்தல் இயலாது. அவர் தம் திருமகன் கோ. வீரபாண்டியன், அரிதின் முயன்று படைத்துள்ள இந்நூல் மிகவும் பயன் உள்ளதாகும். பண்பாட்டு நிலையிலும், வாழ்வியல் நெறிகளிலும் தென்னாடு, வடநாடு இடையே வேற்றுமை இருப்பது போலவே, கலைகளிலும், கோவில் வழிபாட்டிலும், கோவில் கட்டுமான முறையிலும் வேறுபாடு இருப்பதைப் பலரும் அறிவார்கள். வடநாட்டு கோவில்கள் மிகப் பெரும்பாலானவற்றை பற்றி ஆராய்ந்து, தக்க படங்களுடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது இந்நூல். வடநாட்டு இந்து கோவில்கள், யாக பீடங்களிலிருந்து உருவாக்கப்பட்டவை என்றும், பின்னர் எழுந்த புத்த, சமணக் கோவில் அமைப்புகளும், அவற்றோடு இணைந்து வளர்ந்தன என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். வடநாட்டு கோவில் கூரை அமைப்பு, இத்தலங்களின் கூரை அமைப்பை ஒத்தே காணப்படுவதும், தமிழகத்து கோவில்களில் காணப்படும் கற்சிற்பங்கள், வடக்கே இல்லை என்பதும் சுட்டப்பட்டுள்ளன. குடைவரைக் கோவில்கள் பற்றி விரிவான ஆராய்ச்சி, நூலில் இடம் பெற்றுள்ளது. மொகஞ்சதாரோ, அரப்பா காலம் தொடங்கி, விஜயநகர கோவில்கள், விட்டலர் கோவில் முடிய பற்பலவற்றின் சிறப்புகளும், விளக்கங்களும் படிக்க படிக்க இன்பம் பயப்பவை. ஆனால், ஆர்வம் வேண்டும். கலை, வரலாற்று ஆர்வமுடையவர்களுக்கு ஓர் அருநூல் இது. இந்நூலில் அச்சுப் பிழைகள் மலிந்துள்ளன. சற்றே கவனம் எடுத்து பார்த்திருக்கலாம். வந்தேறி என்பது வந்தேரி என்றும், கருவறை என்பது கருவரை என்றும் அச்சாகி இருப்பதுபோல் பல காட்டலாம். – கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 30 அக்டோபர் 2011.