ஒலிக்காத இளவேனில் – ஈழக் கவிஞர்களின் கவிதைகள்
ஒலிக்காத இளவேனில், தொகுப்பு – தான்யா, பிரதீபா கனகா தில்லைநாதன், வடலி வெளியீடு, 10வது குறுக்குத் தெரு, ட்ரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை 135ரூ.
மரணத்துள் வாழ்வோம், சொல்லாத சேதிகள் முதல் மரணத்தில் துளிக்கும் கனவு வரை ஈழக்கவிஞர்களின் கவிதைகள் தொகுதிகளாக வந்து, முக்கியமான அதிர்வுகளை அந்தந்தக் காலகட்டங்களில் ஏற்படுத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ஈழத்தில் எழுந்த போர் நெருக்கடி காரணமாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்த பெண்களின் குரலாய் ஒலிக்காத இளவேனில் தொகுதியை வடலி வெளியிட்டுள்ளது. கனடாவைக் களமாகக் கொண்டு இக்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் தமிழகத்திற்கு ஏற்கெனவே அறிமுகமான கவிஞர்களான அனார், ஆழியாள் ஆகியோரின் கவிதைகளோடு புதியவர்களின் கவிதைகளும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் உலக அளவில் எற்பட்ட அரசியல் மாற்றங்களும் இக்கவிதைகளில் பதிவாகியுள்ளன. 2003 லிருந்து 2009 வரையிலான ஈழ நிகழ்வுகளின் சாட்சியமாக இக்கவிதைகள் இருக்கின்றன. வாழ்வு சிதைந்தும் சிதறியும்போன ஒரு இனம். சமாதானத்தின் நம்பிக்கையில் மீண்டெழ முயலும் தடயங்கள் இக்கவிதைகள்.
—-
பஞ்சதந்திரக் கதைகள், தொகுப்பு – ஜெ. குமணன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167, போலீஸ் கந்தசாமி வீதி, ஓலம்பஸ் இராமநாதபுரம், கோயம்புத்தூர் 641045,விலை 156ரூ.
பஞ்சதந்திரம் என்பது வடமொழியில் எழுதப்பட்ட நீதிக்கதைகளாகும். கி.மு. 200வது ஆண்டில் விஷ்ணு சர்மாவால் தொகுக்கப்பட்ட இக்கதைகளில் விலங்குகள் கதாபாத்திரங்களாக வருகின்றன. குழந்தைகளுக்கான கதை வடிவில் இக்கதைகள் தலைமுறைகளாக சொல்லப்பட்டு வருபவையாகும். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை உபாயங்களைக் குழந்தைகளின் மனதில் சுவாரசியமான வகையில் ஏற்றுவதற்கு இக்கதைகள் உதவுகின்றன. கதை மற்றும் உபகதை என்னும் மடிப்புகளுக்குள் சொல்லப்படும் பஞ்சதந்திரக் கதைகளின் சுவாரசியம் இன்னும் தீராமலேயே இருக்கிறது. இதை அழகிய பதிப்பாக எஸென்ஷியல் பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கிறது. நன்றி – தி சன்டே இந்தியன், 25 நவம்பர் 2012.