ஓடுகளப்போட்டி விதிகளும் விளையாட்டு விதிகளும்
ஓடுகளப்போட்டி விதிகளும் விளையாட்டு விதிகளும், எஸ். நவராஜ் செல்லையா, எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 528, விலை 300ரூ.
தடகளம் உள்ளிட்ட பல விளையாட்டு விதிகள் குறித்த அனைத்து தகவல்களையும் அழகிய தமிழில் கொண்டு வந்திருக்கிறது இந்நூல். ஆசிரியரின் விளையாட்டுத்துறை சார்ந்த பரந்த அனுபவங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆங்கில சொற்களுக்கு இணையான விளையாட்டு கலைச்சொற்கள் இப்புத்தகத்துக்கு மெருகூட்டுகின்றன. சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் காட்டுபவர்கள்தான், இன்று பல்வேறு விளையாட்டுகளில் முன்னணி வீரர்களாகத் திகழ்கின்றனர். அதற்கு தீவிர பயிற்சியுடன் விளையாட்டு குறித்த தொழில்நுட்ப அறிவும் அவசியம். அக்குறையை இந்தப் புத்தகம் போக்கும். பல்வேறு விளையாட்டுகளின் ஆடுகளம் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுடன் வரையப்பட்டிருப்பது வீரர்களுக்கு பெரிதும் உதவும். விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து, வட்டு, மட்டை, குண்டு, கம்பு உள்ளிட்ட உபகரணங்களின் எடை, அவற்றின் வடிவங்களின்படிதான் விளையாட்டு உபகரணங்கள் இருத்தல் போன்ற தகவல்கள் சுவையாக கொடுக்கப்பட்டுள்ளன. மகளிருக்கான போட்டியின்போது செய்யப்பட வேண்டிய வசதிகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்களுக்கும், இளம் மாணவர்களுக்கும் பயன்படும் என்பது உறுதி.
—-
நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள், காசி, வேம்பையன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 128, விலை 75ரூ.
பாரம்பரிய நெல் வகைகளான ஆர்க்காடு கிச்சிலி, மலைநெல் உள்பட பலவகை நெல் ரகங்களைப் பற்றியும், இன்றைய பொன்னி போன்ற ரகங்கள் எனப் பல வகையான நெல் சாகுபடி அதற்கான செலவு, லாபம் ஆகியவற்றைப் பற்றியும் மிக விரிவாக எழுதியிருக்கிறார் காசி வேம்பையன். ஆசிரியர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதோடு வேளாண் பட்டயப்படிப்பும் முடித்தவர் என்பதால், நெல் குறித்த தரவுகளை மிக அழகாகவும் செறிவாகவும் சொல்ல முடிந்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள், சாகுபடியாளர்களின் பேட்டிகள் எல்லாமும் விவசாயிகளுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும். என்றாலும், இதை பொதுவான வாசகர்களும் படித்துப் பயன்பெற முடியும். இந்த நூலில் சில அத்தியாயங்களை உயர்நிலைக் கல்வி அளவில் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். நெல் சாகுபடி குறித்து மாணவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வழியில்லை. நன்றி; தினமணி, 11/11/2013.