உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள்
உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள், சௌமாரீஸ்வரி, மங்கை, சென்னை.
பல தலைவர்களின் அனுபவப்பூர்வமான வழிநடத்தும் பேச்சுக்கள், வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் ரஷ்யாவின் விளாடிமிர் லெனின், 1917ம் ஆண்டு நடத்திய போல்ஸ்விக் புரட்சியின் நினைவு தினமான1921ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உரை நிகழ்த்தினார். அதில் நீ ஓநாய்களுக்கு நடுவில் வாழ நேர்ந்தால், அவற்றைப்போல ஊளையிடப் பழகிக்கொள். அவற்றை முழுவதுமாக வெளியேற்ற இந்த ஏற்பாடு தேவைப்படும் என்றார். காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், ஜவஹர்லால் நேரு, இதிரா உள்ளிட்ட 20 சர்வதேச தலைவர்களின் முக்கிய பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள், நாட்டை நேசிக்கும் அனுபவத்தை அளிக்கின்றன. வரலாற்றை திசை திருப்பிய முக்கிய பேச்சுகள் கொண்ட இந்த புத்தகம் 224 பக்கங்களில் உருவாகி உள்ளது. இதை சென்னை செங்குன்றம் முழு நேர நூலகத்தில் படித்து பயன்பெறலாம். நன்றி: தினமலர், 27/10/2013
—-
புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம், க. பஞ்சாங்கம், அன்னம், தஞ்சாவூர் 7, பக். 304, விலை 200ரூ.
தமிழகத்தின் பல்வேறு கல்விநிலையங்களில் நடந்த கருத்தரங்கு மற்றம் பயிலரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தொல்காப்பியம் எடுத்துரைப்பியல் நோக்கு என்பதில் தொடங்கி, மொத்தம் 24 தலைப்புகளில் தொல்காப்பியம், கல்லாடம், குறிஞ்சி, புறநானூறு, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் என சங்க இலக்கியங்கள் தொடர்பாக வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து அமைத்திருக்கும் இலக்கியப் பதிவுகள். வெறியாடல் தொடர்பான அரிய தகவல்களை 40 பாடல்கள் வழி தந்திருக்கிறார். தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் வரும் மெய்ப்பாடுகளை கவிஞர் பழமலையின் சனங்களின் கதை என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளோடு ஒப்புநோக்கியிருபப்து நவீன இலக்கியத்திலும் ஆசிரியர் ஆழங்காற்பட்டிருப்பதைப் புலப்படுத்துகிறது. இதிலுள்ள கட்டுரைகள் பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்துள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் கட்டுரைகளுக்கு நடுநடுவே 25க்கும் மேற்பட்ட பக்கங்களைக் காணவில்லை. நூல் விமர்சனத்துக்கு இப்படிப்ட்ட நூல்களையா அனுப்புவது? படிக்கும் சுவாரஸ்யத்தையே கெடுத்துவிடுகிறது. பதிப்பகத்தார் இனியாவது கவனம் வைத்தால் சரி. நன்றி: தினமணி, 29/7/2013.