ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர்
ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர், எஸ். ராஜகுமாரன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-4.html
காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னார், ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை எதிர்காலச் சமுதாயம் நம்ப மறுக்கும் என்று. அப்படி ஒரு மனிதர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியிலும் உட்கார்ந்து இருந்தார். அவர்தான் ஓமந்தூர் ராமசாமி செட்டியார். இந்தியா சுதந்திரம் அடையும்போது, அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தவர். அன்று, பிரதமர் என்றுதான் அழைப்பார்கள். மொத்தமே இரண்டு ஆண்டுகள்தான் அவர் அந்த நாற்காலியில் இருந்தார். அவர் கடைபிடித்த அரசியல் நாகரிகம், பொதுவாழ்க்கையில் ஒழுக்கம், நிர்வாகத் திறமை, துரிதமான நடவடிக்கைகள் ஆகியவை இன்றுவரை பாடமாக இருக்கிறது. ஓமந்தூரார் கள்ளங்கபடமற்ற கிராமவாசி. அரசியல் சூதாட்டத்துக்கு அப்பாற்பட்டவர். தியாக முத்திரையை அரசியல் சந்தையிலே விற்கத் துணியும் வணிகராக இருக்க மறுப்பவர். சொந்த வாழ்க்கையையும் நலனையும் மிகமிகக் குறைவான அளவினமாக்கிக் கொண்ட துறவு மனப்போக்கினர் என்று அண்ணா இவரைப் பற்றி எழுதினார். அப்படிப்பட்ட மனிதரைப் பற்றிய ஆழமான வரலாறு இது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அரசு சின்னம் வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தபோது தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்வு செய்தவர் ஓமந்தூரார். சமயச் சார்பற்ற ஒரு அரசாங்கத்தின் சின்னமாக இந்தக் கோயில் கோபுரத்தை எப்படி வைக்கலாம் என்று பிரதமர் நேரு வரை புகார் போனது. கோபுரம் என்பது சமயச் சின்னம் மட்டும் அன்று. அது தமிழ்ப்பண்பாட்டின் சின்னம். எங்கள் மாநிலத்தின் தனிச் சிறப்பாக உலகம் போற்றும் திராவிடக் கட்டடக் கலையின் அடையாளம் என்று பதில் அளித்தபோது பிரதமரால் அதை மறுக்க முடியவில்லை. அந்த சின்னத்தின் கீழே சத்தியமேவ ஜெயதே என்று எழுதியதும் ஊமந்தூரார்தான். அதைத்தான் அண்ணா முதல்வராக இருந்தபோது, வாய்மையே வெல்லும் என்று தமிழ்ப்படுத்தினார். தான் எழுதியதற்குத் தகுந்தமாதிரியே வாய்மையான வாழ்க்கையை ஓமந்தூரார் வாழ்ந்து காட்டினார். இவரது நேர்மையான நடவடிக்கைகள் காங்கிரஸ் காரர்களையே அதிர்ச்சியடைய வைத்தது. இவரை எப்படியாவது அந்த நாற்காலியை விட்டு நீக்கிவிடத் துடித்தனர். தானே பதவி விலகி, அன்றைய தினமே வடலூர் ராமலிங்க அடிகள் மடத்துக்குப் போய் குடியேறியவர் ஓமந்தூரார். அதன்பிறகும் பல்வேறு பதவிகள் அவரைத் தேடி வந்தன. எதையும் ஏற்கவில்லை அவர். ஒரு பக்கம் மலினமாகிவிட்ட அரசியல் இன்னொரு பக்கம் நவீனமயமாகிவரும் வாழ்க்கை முறை. ஓடிக்கொண்டே இருக்கும் இளைய தலைமுறைக்கு இத்தகு நூல்கள் மட்டுமே உட்கார்ந்து சிந்திக்க வைக்கும் என்ற நல்ல நோக்கத்தோடு எம்.ராஜகுமாரன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த நோக்கத்தை முழுமையாகப் பூர்த்தி செய்கிறது இந்தப் புத்தகம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 29/9/2013