கச்சத்தீவைத் திரும்பப் பெற முடியும்
கச்சத்தீவைத் திரும்பப் பெற முடியும், ப. திருமலை பாபுஜி நிலையம் வெளியீடு, நாகர்கோவில், விலை 30ரூ.
சர்ச்சைத் தீவு முடிந்தது என சொல்ல முடியாமல் மெகா சீரியல் போல் நீண்டுகொண்டே இருக்கும் கச்சத்தீவு பிரச்னை குறித்து பல்வேறு ஆய்வுகள் மூலம் கச்சத்தீவை திரும்பப் பெற முடியும் என்ற சிறு நூல் மூலம் அடித்துச் சொல்கிறார் இதழியலாளர் ப. திருமலை. தமிழகத்துக்கும் இலங்கைக்கும் தீராத பிரச்னையாக தொடர்கிறது கச்சத்தீவு. குறிப்பாக தமிழக தேர்தல் சமயத்தில், தமிழக எல்லா அரசியல்வாதிகளின் அடித்தொண்டையிலிருந்து, கச்சத்தீவு தமிழகத்தின் சொத்து. இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும். அதை நாங்கள் மீட்போம் என முழங்குவார்கள். தேர்தல் மேகம் கலைந்ததும் கச்சத்தீவு மீண்டும் சர்ச்சைத்தீவாக தொடரும். இதுதான் இன்றைய எதார்த்தம். கி.பி. 1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் ராமேஸ்வரம் போல் பல்வேறு தீவுகள் உருவாகின. அதில் ஒன்றுதான் கச்சத்தீவு (இதை வாலி தீவு என்று 1974ல் சொல்லியிருக்கிறார் அடல் பிகாரி வாஜ்பாய்). கி.பி. 1605ல் ராமநாதபுரத்தின் சேதுபதி அரச மரபை மதுரை நாயக்கர் மன்னர் ஏற்றுக்கொண்டார். அதில் 69 கடற்படை கிராமங்களும் குத்துக்கால் துவு, குருசடித்தீவு, கச்சத்தீவு என பல தீவுகள் சேதுபதி அரச மரபுக்கு போய் சேர்ந்தன என வரலாற்றின் இறந்துபோன பக்கங்களிலிருந்து தனது ஆய்வை ஆரம்பிக்கும் ப. திருமலை தொடர்ந்து ஆங்கில ஆட்சியில் 1913ம் ஆண்டு ராமநாதபுர ராஜாவுக்கு கச்சத்தீவை குத்தகையாக ஒப்பந்தம் போட்டதையும் சொல்கிறார். இலங்கை 1920ம் ஆண்டிலிருந்து கச்சத் தீவு எங்களுக்கு சொந்தமானது என உரிமை கொண்டாட ஆரம்பித்தது. தமிழகத்தின் விருப்பம் இல்லாமலேயே 1974ம் ஆண்டு அன்று இலங்கை அதிபராக இருந்த சிறிமாவோவிடம் இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஒப்பந்தம் போட்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அந்தப் பிரச்னை அனுமன் வால்போல் நீண்டு கொண்டே இருக்கிறது. கூடவே சர்ச்சையும், தமிழக மீனவர்களின் துயரங்களும் முடிவில்லாமல் போவதுதான் மாபெரும் வேதனை. இந்நூலில் கச்சத்தீவைத் திரும்பப்பெற முடியும் என சர்வதேச உதாரணங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: அந்திமழை, 1/10/2014.