கடைத்தெருக் கதைகள்
கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ.
ஆ. மாதவன் தமிழ்ச் சிறுகதை உலகில் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர். இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு, அன்றைய சிற்றிதழ்களில் வெளியானவை. மறுபதிப்பு காண்பதும் இவை வெளியான சிற்றிதழ்களும் இத்தொகுப்பின் சிறப்புக்கு சாட்சியங்கள். திருவனந்தபுரத்தில் அங்காடி வீதியில் கடை வைத்திருந்தவர் பார்க்க நேர்ந்த மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையில் நேர்ந்த, நேர்ந்திருக்கக்கூடிய, நேர்ந்திருக்க வேண்டிய சம்பவங்களின் நீட்சிதான் இந்தச் சிறுகதைகள். கடைத்தெருவில் சிற்றேவல் செய்தும், சிறு பிழைப்பு நடத்தியும் வாழும் மனிதர்களை நாம் கடந்து போகிறோம். ஆனால் மாதவன் அவர்களை சற்று உற்றுநோக்குகிறார். நமக்கும் காட்டுகிறார். சிறு ஏமாற்று, சுரண்டல் எல்லாவற்றுக்கும் மேலாக, எளிய மனிதர்கள் வாழ்வில் காமம் குழிபறிக்கும் சூழலை, ஓர் ஆணின் நிலையில் உம்மிணி கதையும் ஒரு பெண்ணின் நிலையில் காளை கதையும் சித்திரிப்பது இன்றைக்கும் நிதர்சனமானவை. நன்றி: தினமணி, 22/9/2014.
—-
கண்ணீர் ஓவியம், நாஞ்சில் பதிப்பகம், நாகர்கோவில், விலை 150ரூ.
தமிழ் மீது காதல், தாய்ப்பாசம், ஈழக்குரல், காதல், காமம், அரசியல், சுற்றுச்சூழல், ஆன்மிகம் என அனைத்து பிரிவுகள் குறித்தும் அக்கறையுடன், தனது கருத்துக்களை கவிதை வடிவில் எளிமையுடனும் தெளிவாகவும் வெளிப்படுத்தியுள்ளார், பேராசிரியர் மு.அல்பென்ஸ் நதானியேல். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.