கண்ணன் வருவாயா
கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ.
தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. இருபத்தைந்து வயதில் படிக்க வேண்டிய வாழ்க்கைச் சூத்திரத்தை வாழ்ந்து முடித்த பின் படிப்பதால் என்ன பயன் எனக் கேள்வி எழுப்புகிறார். பகவத் கீதையின் சாரம் பூரண அன்பு. தன்னலம் கருதாத தூய்மையான அன்பு. பொதுவாகக் கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது மட்டுமே கீதையின் சாரம் என்றிருப்பவர்களுக்கு அதன் ஆழத்தைத் தொட்டு அன்பின் வெளிப்பாட்டை உணர்த்துகிறார் ஆசிரியர். வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லி பகவத் கீதைக்கும் அந்த அனுபவங்களுக்கும் உள்ள தொடர்பையும் விளக்குகிறார். கண்ணா வருவாயா என்னும் இந்த 496 பக்க நூலை ஒரு பெரிய காதல் கடிதம் என்கிறார் ஆசிரியர். பகவத் கீதை என்பதை ஆன்மிகத் தத்துவமாக மட்டும் கருதாமல் அனைவரும் படித்து அனுபவிக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது இந்நூல். நன்றி: தி இந்து.
—-
101 குட்டி கதைகள், டாக்டர் மா.பா. குருசாமி, செல்லப்பா பதிப்பகம், மதுரை, விலை 80ரூ.
ஒவ்வொரு கதையும் ஒரு பக்கம் அல்லது இரு பக்கம் என்ற அளவில் 101 குட்டிக் கதைகள் கொண்ட நூல். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதைப்போல, இதில் உள்ள கருத்துகள் பயன் தருபவை. நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட கதைகள் என்றாலும் இளைஞர்களும் முதியவர்களும் படிக்கத்தக்கவை. நன்றி: தினத்தந்தி.