கம்பனில் சட்டமும் நீதியும்
கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 184, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html கம்பன் காப்பியம் என்பது ஓர் உயர்பாற்கடல். அதில் இருந்து யார் யாரோ எவ்வளவோ கருத்து அமுதத்தை அள்ளி அள்ளிப் பருகியிருக்கிறார்கள். ஆனால் இதுவரை அறியப்படாத கருத்துக்களை தேடி எடுத்துக் கொண்டுவந்து தந்திருக்கிறார் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன். சட்டமும் நீதியும் அவரது உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்ட ஒன்று என்பதால், நீதியரசர் கம்பனில் இருந்து சட்டத்தையும் நீதியையும் எடுத்துத் தருவது சாலப்பொருத்தம். கம்பராமாயணத்தை இதுவரை யாரும் இந்தத் தலைப்பில் ஆய்வு செய்ததில்லை என்பது கூடுதல் கவனம் பெறுகிறது. சட்டத்தின் கண் கொண்டும் நீதியின் வழியும் பார்வை புதிது. இன்றைய சட்டமுறையை கம்பன் அன்றே ராமாயணத்தில் சொல்லிவிட்டார் என்பதை நீதியரசர் பல இடங்களில் நிறுவிச் சொல்கிறார். ஆங்கிலேயர் தந்துவிட்டுப்போன இன்றைய சட்டத்தையும் நீதியையும் பண்டைய தமிழர்கள் முன்பே கடைப்பிடித்து வந்துள்ளனர் என்று கம்பன் வழிநின்று நிறுவும் இடங்கள் வியப்பிற்குரியவை. (காண்க: பெட்டிச் செய்திகள்) முதலில் சட்டம் என்ற சொல்லை கம்பன் தன் காப்பியத்தில் எங்குமே சொல்லாத நிலையில், அதை அறம், நீதி, தருமம், முறை, முறைமை, செங்கோல், மனுமுறை போன்ற சொற்களை கையாளும் இடங்களின் பின்னணியில் இருந்தே கம்பனின் சட்டத்தை நமக்கு அறுவடை செய்து தருகிறார். அதேபோல் நீதி என்ற வடமொழிச் சொல்லை கம்பன் கையாளும் விதத்தில் தற்காலத்தில் நீதியின் கூறுகள் அதில் பொதிந்து கிடப்பதை நமக்கு உணர்த்தி, கம்பனின் நீதியை நிலை நாட்டுகிறார். நீதியரசரின் தீர்ப்பைப்போலவே, இந்நூலின் கருத்துக்களும் உண்மைகளை அகழ்ந்துதெடுத்துக் கொடுத்து நம் கவனத்தை ஈர்க்கின்றன. அருள் சார்ந்த நீதிக்கு, அதன் வழக்குரைஞர்களும் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே கம்பர் கறுப்பு அங்கி தந்திருப்பதை நிறுவுகிறார் விஸ்வாமித்திரர். தசரதன், இராமன், பரதன், அனுமன் என்று காப்பியத் தலைவர்களை மட்டும் நீதிமான்களாகக் காட்டாமல், எதிரியின் கூடாரத்தில் இருக்கும் இராவணன், வீடணன் உள்ளிட்டோரையும், நீதிமான்களாகக் காட்டுவதைச் சுட்டிக்காட்டும் இடங்கள் வியப்பு. கம்பன் காட்டும் நடுவுநிலைமை, வரிவிலக்கு, தண்டனைக் குறைப்பு, சாட்சியியல், சட்டமுரண், தூதர்களுக்கான சட்டப்பாதுகாப்பு, ஊனமுற்றோர் உரிமைகள், அகதிகளுக்கான சட்டம் என்று எல்லாமே சமகாலத்தோடு பொருந்திப்போகும் பல விஷயங்களை கம்பனில் தேடி, அடையாளம் காட்டுவது ஆர்வத்தைத் தூண்டுகிறது. அரிஸ்டாட்டிலுக்கு முற்பட்ட காலத்திலேயே கம்பன் சட்டத்தின் ஆட்சியையும் மாட்சியையும் கூறியுள்ளதை எடுத்துக்காட்டி எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்தான் என தன் சட்ட அறிவுமூலம் கம்பனுக்கு உயர்வு தருகிறார் நீதியரசர். மிதமிஞ்சிய அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை அயோத்தியா காண்டம் காட்சிகள் மூலமும், சட்டத்தின் நடுவு நிலையை கும்பகர்ணன் மூலமும் கம்பர் நிறுவியிருப்பதைக் காட்டுவது புதிய செய்தி. கம்பன் காப்பியத்தில் இவ்வளவு சட்ட நுணுக்கங்கள் இருப்பதை சுவை குன்றாமல் சொல்வதால் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. இலக்கிய வழி சட்ட ஆய்வுக்கு இந்நூல் முன்னோடியாக மிளிர்கிறது. கம்பன் காட்டும் சட்டம் ஒழுங்கு இராவணனைக் கொன்று, வீடணனுக்குப் பட்டம் கட்டியபின், வீடணன் சீதையை இராமனிடம் அழைத்து வருகிறான். அப்போது சீதையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இராமன் இருக்கும் இடத்தில் கூடிய முனிவர்கள், தேவர்கள், வித்யாதரப் பெண்கள், குரங்குகள் அளவுக்கு அதிகமாகக் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சீதை வர வழியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அரக்கர்களின் காவலர்கள் தடியடி நடத்துகிறார்கள். அதைக் கேள்விப்பட்ட இராமன் வீடணனைக் கோபித்துக் கொள்கிறான். இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டம் மேலோர்களின் கூட்டம். உன்னுடைய ஆட்சியில் மேலோர்களுக்கே இப்படிப்பட்ட நிலைமை என்றால், சாதாரணமானவர்கள் கதி என்ன ஆகும் என்று வீடணனைக் கேட்கிறான். அதன் பிறகு, சாதாரண மனிதர்களை அரசன் எப்படி நடத்த வேண்டும் என்பதை இராமன் எடுத்துச் சொல்கிறான். கம்பனில் குற்றம் தண்டனையும் குற்றம் என்று வந்தபின் ஆண்பால் – பெண்பால் என்ற வேற்றுமைக்கு இடமில்லை என்கிற குற்றவியல் கோட்பாட்டை கம்பன் பாலகாண்டத்தில் தாடகை வதைப் படலத்தில் காட்டுகிறான். அதேபோல், நீதி பரிபாலிப்பவர் தண்டனை அளிக்கும்போது, எஜமான் – அடிமை என்கிற வேறுபாட்டையும் பார்க்க மாட்டார்கள் என்கிற செய்தியை வாலி வதைப்படலத்தில் கம்பன் பதிவு செய்கிறான். ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்கும்போது சட்டத்தின் எல்லையை மீறாமல் தண்டனை வழங்க வேண்டும் என்பது கம்பன் காட்டும் நீதி. இதை சுக்கிரீவனுக்கு அறிவுரை வழங்கும் இடத்தில் கம்பன் காட்டுகிறான். தவறு செய்கிறவர்களையும் நீ கட்டாயம் தண்டிக்க வேண்டும். ஆனால் அப்படி தண்டிக்கும்போது அது அறவரம்பு இகழாவண்ணம் இருக்க வேண்டும். அதாவது தர்மத்தின் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் என்று பொருளில் ஒரு பாட்டில் கூறுகிறார். நன்றி: குமுதம், 13/4/2015.