கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!
கம்பரின் நூலகம் ஆழ்வார்கள்!, எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, பக். 264, விலை 200ரூ.
புதுவை கம்பன் கழன பொன்விழா கருத்தரங்கில் நூலாசிரியர் பேசியதன் தொகுப்பே இந்நூல். கம்பரின் இராமாவதாரக் காவியத்தின் சிறப்புக்குக் காரணம், அவர்தொட்ட இடமெல்லாம் ஆழ்வார் அமுதப் பாசுரங்களையும் மிக நேர்த்தியாக காவியத்தில் கலந்துகொடுத்ததால்தான் என்பதை நிறுவும் நூல். ஆழ்வார்கள் தேனும் பாலும் நெய்யும் அமுதமும் கலந்து பாடிய அருட்பாசுரங்களை இராமாவதாரக் காவியத்துள் கலந்து கவிச்சக்கரவர்த்தி பாடியிருப்பதால்தான் அமுதத்தைவிட பன்மடங்கு சுவையாக இராமாயணக் காவியம் தித்திக்கிறது என்பது நூலாசிரியரின் வாதம். ஆய்வும் கூட. ஆழ்வார்கள் செய்த தமிழ் மாலையை வான்மீகி அறியாததால்தான் ராமனை வெறும் மாவீரன் என்று மட்டுமே காட்டமுடிந்தது. கம்பரும் ஆழ்வார்கள் பாசுரம் உதவியதால், அவர் ராமனை திருமாலின் அவதாரமாக நிறுவ முடிந்தது என்கிறார். கம்பரையும் ஆழ்வார்களிடம் அவருக்கு இருந்த ஈடுபாட்டையும், ஆழ்வார்களின் பாசுர சுவையையும் ஆய்வு நோக்கில் சுவை குன்றாது தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 17/8/2015.