கர்ணா நீ மஹத்தானவன்
கர்ணா நீ மஹத்தானவன், ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 80ரூ.
தானம் செய்கிறவர்களை கர்ண பிரபு என்று அழைப்பது நடைமுறையில் நாம் பார்ப்பதுதான். தான வீரன் கர்ணன் என்றும்கூட நாம் நினைத்திருக்கிறோம். ஆனால் வியாச பாரதத்தில் ஒரு இடத்தில்கூட வறியவர்களுக்கு தானம் அளித்தான் என்ற வரலாறு இல்லை. ஆனால் எப்படி அவன், தான வீரன் என்று பெயர் பெற்றான் என்பதை இந்த புத்தகம் சுவையாக தெளிவுபடுத்துகிறது. கர்ணன் வெறும் கொடையாளி மட்டுமல்ல, மிகச்சிறந்த நட்புக்கும் இலக்கணமானவன். பாண்டவர்களே வியந்து அஞ்சும் அளவுக்கு வில்வித்தையில் நிபுணத்துவம் பெற்றவன். எவர் எந்த ஒரு நிலையிலும் தன்னைப் பெற்றவர்களையும் தனது குடும்பத்தையும் பெருமையாக நினைக்கிறார்களோ, அவர்களே உண்மையான சுயமரியாதையுடையவர்கள். அந்த வகையில் கர்ணன், துரியோதனனால் அங்க தேசத்திற்கு மன்னனாக முடிசூட்டப்பட்டஉடன், தேர் சாரதியான தன் தந்தையை அவையோருக்கு அடையாளம் காட்ட தயங்கவில்லை. பட்டாபிஷேகத்தால் நனைந்த தன் உடைகளோடு ஓடோடிச் சென்று தன் தந்தையின் கால்களில் விழுந்து வணங்கி ஆரத்தழுவி மகிழ்ந்தவன் கர்ணன். வியாச பாரதத்தில் இருந்து, வில்லிபுத்தூரார் எழுதிய பாரதத்தில், கர்ணனுடைய வரலாறு மாறுபடும் இடத்தையும் இந்நூல் அலசுகிறது. இந்நூலை படித்து முடிக்கிற பொழுது, நம் உள்ளத்தில் தோன்றும் உணர்வும் இதுதான் கர்ணா உண்மையிலேயே நீ மஹத்தானவன்தான். -ம.வெ. நன்றி: தினமலர், 10/8/2014.
—-
அடிப்படை வாதங்களின் மோதல், தாரிக் அலி, பாரதி புத்தகாலயம்.
அடிப்படைவாதத்துக்கு எதிராக ஒன்று திரள்வோம். பிரபல எழுத்தாளர் தாரிக் அலி ஆங்கிலத்தில் எழுதி, தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட அடிப்படை வாதங்களின் மோதல் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். பாரதி புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது. உலகளவில் தற்போது நடந்து வரும் அடிப்படை வாதங்களின் மோதலை இந்நூல் சித்தரிக்கிறது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சாமுவேல் ஹன்டிங்டன் எழுதிய நாகரீகத்தின் மோதல் என்ற நூலில் இருந்து இந்நூல் வேறுபட்டது. உலகில் இரண்டு விதமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று அடித்தளவாதம். இது ஒரு இனத்தின் நாகரிகம், பண்பாடு, சமூக, பொருளாதாரத்தை எடுத்துரைக்கிறது. மற்றொன்று அடிப்படைவாதம். இது ஒரு இனத்தை அழித்து மற்றொரு இனம் வளம் பெறுவதை முன்வைக்கிறது. உலகில், அடிப்படைவாதம்தான் இப்போது தலைதூக்கி உள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில், இஸ்லாமியர்களை, இஸ்ரேலின் யூதர்கள் அழிக்க நினைப்பதும், ஈராக்கில் சிறுபான்மை இஸ்லாமியர்களை அழித்து, பெரும்பான்மை இஸ்லாமியர்கள், அதிகாரத்துக்கு வரத்துடிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் அடிப்படை வாதத்துக்கு எதிரான குரலை, உலகம் முழுவதும் ஒலிக்கச் செய்யும் பணியை, தாரிக் அலி செய்துள்ளார். அதே நேரத்தில் இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும் விவரித்துள்ளார். மத்திய காலகட்டத்தில் இஸ்லாம் எப்படி தன்னை கட்டமைத்துக்கொண்டது, குறிப்பாக மேற்கத்திய பண்பாடு, ஆசிய பண்பாடுகளின் பாதிப்பகளோடு, இஸ்லாம் எப்படி நிலை நின்றுள்ளது என்பதையும் குறிப்பிடுகிறார். ஒரு இனம், பிறிதொரு இனத்தை அழித்து வளர வேண்டும் என்ற அடிப்படைவாத தத்துவம், எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, தாரிக் அலி சித்தரிக்கிறார். இன்றைய காலகட்டத்தில் யாரும், யாரையும் அழித்துவிட்டு முன்னேறுவதை ஏற்க முடியாது. அரசியல் மற்றும் சமூக ரீதியாக எந்த கோணத்திலும், அடிப்படை வாதத்தை புறந்தள்ளவேண்டும் என்ற தாரிக் அலியின் குரல், இந்நூலில் வெளிப்படுகிறது. அடிப்படைவாத மோதலுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்று திரள வேண்டும் என்பதையே, இந்நூல் உணர்த்துகிறது. -கவிஞர். எச்.ஜி.ரசூல். நன்றி: தினமலர், 10/8/2014.