கலிங்கத்துப் பரணி
கலிங்கத்துப் பரணி, உரையாசிரியர் – ஆ.வீ. கன்னைய நாயுடு, பக்கம் 392, முல்லை நிலையம், சென்னை – 17, விலை 175 ரூ.
ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவது பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த்தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால் படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடைபோன்ற சீரான அழகிய விளக்கவுரையும் தந்துள்ளார் இந்நூலாசிரியர். மேலும் பாடல்களில் இடம்பெற்றுள்ள பலவகை அணிகள், இலக்கணக் குறிப்புகள், ஒன்பது வகை சுவைகள், புறப்பொருள் துறைகள் போன்றவையும் முழுமையாகவும், தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் தாழிசை முதற்குறிப்பு அகராதி கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. எவருடைய உதவியுமின்றி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பரணி படிக்க விழையும் அனைவருக்குமே இந்நூல் நல்ல வழிகாட்டி. எந்தக் காலத்தும் படித்து சிலாகிக்க வைக்கும் அந்தக்கால பரணிக்கு இந்தக் காலத்துக்கேற்ப எழுதப்பட்ட உரை நூல்.
—
எண்ணெய் மற மண்ணை நினை, வந்தனா சிவா – தமிழில் போப்பு, பக்கம் 212, பூவுலகின் நண்பர்கள், சென்னை – 26, விலை 120 ரூ.
உலகம் எங்கும் உற்பத்திமுறை மாறிவிட்டது. இது நமது கலாசாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் எல்லாரும் நிலத்திலிருந்து அந்நியப்பட்டவர்களாக மாறிவிட்டோம் என்று கூறும் நூல். புவி வெப்பமாதல், பருவப் பிறழ்வு போன்றவை சுற்றுச் சூழலை நாம் காக்கத் தவறிவிட்டதால் இயற்கை நமக்குத் தந்துள்ள தண்டனைகளாகும் என்றும், இயற்கையுடன் இயைந்து செல்வது ஒன்றுதான் மனித குலத்தின் முன் உள்ள ஒரே சரியான பாதை என்றும் கூறும் நூல். உலகின் இயக்கத்துக்கு அவசியமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் முதற்கொண்டு வானத்தில் ஓசோன் மண்டலத்தில் ஏற்படும் ஓட்டை வரை ஒன்றிற்கொன்று இருக்கும் தொடர்புகளை இந்நூலாசிரியர் வந்தனா சிவா விளக்கியிருக்கிறார். ஒன்றில் ஏற்படும் பாதிப்பு ஒரு சங்கிலித் தொடர்போல பிறவற்றையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். நமது விவசாய முறை சுயசார்பான விவசாயமாக இருந்ததுபோய், விவசாயம் தொழிற்சாலைகளை அவை தரும் உரத்தை – பூச்சிக்கொல்லி மருந்துகளை, விதைகளைச் சார்ந்து இயங்கத் தொடங்கியதே அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூலகாரணம். விவசாயத்தை உணவைத் தொழில்மயப்படுத்தியதால் மனிதகுலம் இன்று சுயஅழிவின், சுய விலகலின் சறுக்குப் பாதையில் நிற்கிறது என்கிறார் நூலாசிரியர். காந்திய சூழலில், அரசியல், பொருளாதாரப் பார்வையின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் சிறந்த நூல்.
—
ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள், ஜீ. முருகன், பக்கம் 128, ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை, விலை 80 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-402-0.html
புகழ்பெற்ற ரஷ்ய திரைக்கலைஞரான ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு திரைப்படங்களைப் பற்றிய ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. ஒவ்வொரு திரைப்படத்தின் கதையின் மையப்புள்ளி, கதாபாத்திரங்களின் மன உணர்வுகள், அப்படங்களை உருவாக்கும்போது தார்க்கோவஸ்கியின் எண்ணவோட்டம் போன்றவற்றை விரிவாகப் பேசுகின்றன கட்டுரைகள். குறிப்பாக தேவாலயங்களில் கடவுள் உருவங்களை வரையும் ஆந்த்ரேருப்ளேவ் என்ற ஓவியனின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஆந்த்ரே ரூப்ளேவ்’ என்கிற திரைப்படம் பற்றிய கட்டுரையும், தனது தாய்நாடான ரஷ்யாவிட்டு, இத்தாலியில் வாழ நேர்ந்தபோது தனது நாடு, ஊர், குடும்பம் இவற்றை எண்ணி ஏக்கம் கொள்ளும் சோஸ்னோவஸ்கி என்னும் இசைக்கலைஞனைப் பற்றிய ‘நோஸ்டால்ஜியா’ என்கிற திரைப்படம் பற்றிய கட்டுரையும் சிறப்பானவை. ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் திரைப்படங்கள் நுட்பமானவையாயினும் எளிமையானவையல்ல. மீண்டும் மீண்டும் பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு இக்கட்டுரைகள் நிச்சயம் உதவும். அடுத்த பதிப்பில் பொருளடக்கத்தையும் சேர்ப்பது மிகவும் அவசியம். நன்றி: தினமணி 22-10-2012