ஸ்ரீவைஷ்ணவம் என்சைக்ளோபீடியா
செவ்வியல் இலக்கிய மணிமாலை, ம.சா. அறிவுடைநம்பி, பக்கம் 320, கருமணி பதிப்பகம், புதுச்சேரி-8, விலை 160 ரூ.
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள், தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் சாரம் செவ்வியல் இலக்கியத்துக்குச் செழுமை சேர்த்துள்ளன. தமிழ் இலக்கியங்களில் இசைநிறைக் கிளவிகள், காப்பியங்களில் கனவுகள் ஆகிய கட்டுரைகளை ஒரு முறைக்கு இருமுறை படித்துச் சுவைக்கலாம். அந்தந்தப் பக்கத்திலேயே அதற்கான அடிக்குறிப்புகளைத் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. பழந்தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் இளம் ஆய்வாளர்களுக்கான சிறந்த வழிகாட்டி நூல். ‘தமிழ் இலக்கியங்களில் மதுவிலக்கு’ என்ற கட்டுரை 18-01-2009-இல் தினமணி தமிழ்மணியில் வெளியாகி, பின் அதே கட்டுரை 21-07-2009 இல் தமிழ் ஓசை பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. இனிமேலும் இத்தவறு நிகழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
—
நாட்டுவைத்தியக் களஞ்சியம், கொ.மா. கோதண்டம், பக்கம் 304, நிவேதிதா பதிப்பகம், சென்னை -94, விலை 175 ரூ.
‘எடுத்ததற்கெல்லாம் ஊசி மாத்திரை என்று ஓடாமல், ஒரு தலைவலிக்குக்கூட ஐம்பது, நூறு என்று செலவு செய்யாமல் வீட்டு அருகில் முளைத்திருக்கும் துளசி போன்ற செடிகளின் இலைகளாலும், வீட்டில் இருக்கின்ற சுக்கு, மிளகு போன்றவற்றினாலும் நமக்கு நாமே எளிய முறையில் செய்துகொள்ள உதவும் இனிய மருத்துவமே, மூலிகை மருத்துவம்’ என்று சொல்கிற நூலாசிரியர், இந்நூலில் சித்த மருத்துவ அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவத்தைச் சொல்லியிருக்கிறார். தலைவலி, வயிற்றுவலி, காதுவலி, வாயுத்தொல்லைகள், நரம்புத்தளர்ச்சி, பெண்களின் நோய்கள், குழந்தைகளின் நோய்கள் போன்ற பல நோய்களை மூலிகைகளின் துணையோடு எவ்வாறு விரட்டியடிக்கலாம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். தலைவலிக்கு மாத்திரைகளைத் தேடாமல் இரண்டு துளி வெற்றிலைச் சாறை மூக்கில் விட்டால் போதும், ‘பாலில் பூண்டைச் சேர்த்து உண்டுவர இரத்தக் கொதிப்பு குணமாகும்’ என்பன போன்ற எளிய மருத்துவக் குறிப்புகள் நிறைந்துள்ளன. மருந்துகளைச் சுத்தி செய்யும் முறைகள், நாட்டு மருந்துகளின் மருத்துவ குணங்கள் போன்றவற்றையும் விளக்குகிறார். மருத்துவம் செய்துகொள்வது அதிகச் செலவு பிடிக்கும் ஒன்றாக ஆகிவிட்ட இக்காலத்தில் மிகக் குறைந்த செலவில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல்நோய்களை நீக்கிக்கொள்ள உதவும் சிறந்த நூல்.
—
ஸ்ரீவைஷ்ணவம் என்சைக்ளோபீடியா, வேணுசீனிவாசன், பக்கம் 360, கிழக்கு பதிப்பகம், சென்னை -14, விலை 200 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-425-0.html
ஸ்ரீவைஷ்ணவ தத்துவத்தைப் பற்றிய பலவிதமான புரிதல்களையும் புகட்டும் நல்ல தொகுப்பு. நான்கு பகுதிகளில் அனைத்தையும் விளக்க முற்பட்டுள்ளார் நூலாசிரியர். வைஷ்ணவம் என்பதன் விளக்கம். வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கான தத்துவங்கள் இவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்வதற்காக அவதரித்த ஆழ்வார்கள், அவர்களின் கருத்துகளுக்கு விளக்கங்களைச் சொல்லி மக்களிடையே பரப்பிய ஆச்சார்யர்கள் எனக் கச்சிதமாக நான்கே பகுதிகளில் மொத்தமும் அடக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயத்தின் பால் பற்று கொண்டு கடைப்பிடிக்கும் சாதாரண பக்தன் ஒருவன், அதைப் பற்றிய புரிதல்களும் ஞானமும் கொண்டிருக்கவேண்டும். அதை இந்த நூல் நிச்சயம் கொடுக்கிறது எனலாம். வேதங்களில் வைணவம், தமிழ்நாட்டின் சங்க இலக்கியம், தொல்காப்பியம் இவற்றில் வைணவமும் திருமால் வழிபாடும், வைணவமும் வாழ்க்கையும். விசிஷ்டாத்வைத தத்துவம், அவற்றில் பொதிந்துள்ள ரஹஸ்யத்ரயம் எனப்படும் முப்பொருள் உண்மை, மூன்று மந்திரங்கள், அர்த்தபஞ்சகமாகிற ஐம்பொருள் தத்துவம், குறிப்பாக வைணவத்துக்கு ஆதாரத் தத்துவமாகிற சரணாகதித் தத்துவம் இவை அனைத்தும் இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆழ்வார்கள், ஆச்சார்யர்களின் வாழ்வியல் செய்திகள், வைணவ தத்துவ ஞானத்தை எளிமையாக விளக்குகின்றன. உண்மையில் இது ஓர் என்சைக்ளோபீடியா என்று சொல்வதற்குத் தகுதியான நூலாகவே திகழ்கிறது. நன்றி: தினமணி 22-10-2012
