நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்
நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ்.பரதன், திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, ழ பிளாக், அண்ணாநகர், சென்னை-40. பக்.174, விலை 150 ரூ.
ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம். அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754 -1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச் செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். துபாஷி என்று சொல்லப்படுகின்ற இருமொழியாளராக அரசுப் பணியில் இருந்த பச்சையப்பர் தான் செல்லும் ஊர்களில் எல்லாம் தனது அறப்பணியைத் தொடர்ந்துள்ளார். சிதம்பரம், சீர்காழி, திருவரங்கம், திருவானைக்காவல், மதுரை, அழகர்கோயில் போன்ற ஊர்களில் மட்டுமல்லாது, வாரணாசி (காசி)யில் கூட இவருடைய அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. தனக்குப் பின்னரும் தொடர்ந்து அறக்கட்டளைகள் சிறப்பாகச் செயல்பட விரும்பி பௌனி நாராயணப் பிள்ளையை அறங்காவலராக நியமித்தது அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. இந்நூலைப் படிப்பதன் மூலம் பச்சையப்பர் வரலாற்றை மட்டுமல்ல, பதினெட்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரம், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகள் எப்படி இருந்தன என்பதையும் அறிய முடிகிறது. வரலாற்று ஆசிரியர் கே.கே.பிள்ளை குறிப்பிடுவதைப் போல “தமிழரின் வாழ்வில் காஞ்சி பச்சையப்ப முதலியாரின் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்துள்ளது’ என்பது உண்மையே.
—
திருக்குறள்- புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை, அர.வெங்கடாசலம், பக். 570, அர.வெங்கடாசலம், ஏ 19, வாஸ்வானி பெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்ஷன், பெங்களூர்- 560048. விலை 285 ரூ.
திருக்குறளுக்கு ஏராளமான விளக்கவுரைகள் வெளிவந்துள்ளன. பொருளியல், மேலாண்மையியல், கல்வியியல், அறவியல், தத்துவவியல், சமூகவியல் என்று பல துறைகளின் கருத்துக் கருவூலமாகத் திருக்குறள் விளங்குகிறது என்பதைப் பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிப்படுத்தியுள்ளன. திருக்குறளுக்கு வழக்கமாக எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு மாறாக, அதில் பொதிந்துள்ள புதிர்த் தன்மையை விளக்கி அதற்கு உளவியல்ரீதியிலான விளக்கங்களை அளிக்கும் கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நூல். 580 – க்கும் மேற்பட்ட குறள்களுக்கான பொதுவான விளக்கவுரை, அதில் காணப்படும் வழக்கமான புரிதலுக்கு மாறான புதிர் விளக்கம், மரபுரைகளில் காணப்படாத, தர்க்கரீதியான, ஏற்கத்தக்க புதுப்பொருளை உளவியல் முறையில் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். சான்றாக, கண்ணோட்டம் என்ற சொல்லுக்கு, பழகியவர் உதவி கேட்குமிடத்து மறுக்க இயலாது, அவர்களிடம் அன்பு காட்டுவது என்று பொருள் கூறப்படுகிறது. ஆனால் கண்ணோட்டம் என்பது உளவியலில் Empathy என்று கூறப்படும் சொல் எனவும் அடுத்தவருடைய தனிப்பட்ட பார்வையில் காணப்படும் உலகத்தில் நுழைந்து, அவர் பார்க்கும் உலகத்தை எவ்வித விருப்பு வெறுப்பின்றி பார்ப்பது எனவும் கூறுகிறார். அதனை அன்பு, ஒப்புரவறிதல் போன்ற அதிகாரங்களில் உள்ள குறள்கள் வழி விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். திருக்குறளைப் புதுமையான வழியில் புரிந்துகொள்ளவும் விரிவான முறையில் அறிந்துகொள்ளவும் உதவும் சிறந்த ஆய்வு நூல்.
—
மொழியும் இலக்கிய உறவும், சுபாசு, பக்.104, சிந்தியன் பதிப்பகம், சென்னை-35. விலை ரூ.70 ரூ.
இலக்கியங்கள் மனித வாழ்வை உள்ளது உள்ளபடி எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடிகள். இலக்கியச் செழுமை, அழகில்தான் மொழியின் பெருமை உள்ளது. ஆக, மொழிக்கும், இலக்கியத்துக்குமான உறவைப் பிரித்துப் பார்க்க முடியாது. அவ்வகையில், தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் இடையேயான உறவை விளக்கும் வகையில் பல கட்டுரைகள் இத் தொகுப்பில் உள்ளன. கட்டுரைகள் சங்க இலக்கியங்களில் தொடங்கி தற்காலப் புதுக்கவிதைக் காலம் வரைத தொடருகின்றன. “இன்னொரு கண்ணகி’ கட்டுரையில் கண்ணகியின் மற்றொரு பரிமாணத்தை விளக்கும் நூலாசிரியர், கம்பனின் சீதை, பாரதியின் “பாஞ்சாலி சபத’ திரௌபதி, பாரதிதாசனின் “சஞ்சீவி பர்வதச் சாரல்’ வஞ்சியையும் சுட்டிக் காட்டி பெண்மைக்குப் பெருமை சேர்க்கிறார். வ.சுப. மாணிக்கனாரின் மொழிக்கொள்கையை விளக்கும் கட்டுரையும், தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரைப் பற்றிய கட்டுரைகளும் உள்ளன. எல்லோரும் வலியுறுத்தும் ஆனால் அதிகம் பேசாத சிறுவர் இலக்கியம் தொடர்பான கட்டுரை, சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள், இதழ்கள் குறித்து பல அரிய, புதிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது. கடல் வணிகம், ஆளுமை, அகராதி, மொழியுரிமை என கட்டுரைகள் அனைத்தும் புதிய இலக்கிய ஆய்வுத்தளங்களுக்கு வழிகாட்டும் வகையில் உள்ளன. நன்றி: தினமணி 29-10-2012