கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம்
கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம், பெ.கு. பொன்னம்பலநாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108, பக்கக்ம் 256, விலை 125 ரூ.
அறுபத்து நான்காவது நாயன்மார் என்று சைவப் பெருமக்களால் பாராட்டப்பட்ட கிருபானந்தவாரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையாகச் சொல்லும் நூல். வாரியார் தனது ஒன்பதாவது வயதிலேயே மேடையேறிப் பேசியதும், பன்னிரண்டாவது வயதிலேயே பத்தாயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பயின்றதும் மைசூர் சென்று வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டதும் சுவையான தகவல்கள். சைவ, வைணவ நூல்களைப் பயின்றதைப் போலவே வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் போன்றவற்றையும் அவர் ஆழ்ந்து பயின்றிருக்கிறார். வாரியார் பேச்சிலிருந்து பல இடங்களில் மேற்கோள்கள் காட்டப்பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக பழமொழிகளின் உண்மையான பொருள், நுட்பமான சொல்லாடல் (வணங்குதல், தொழுதல் வேறுபாடு), இரு பொருள் பட உரைத்தல் (சூரபன்மன் கொடியவன். பின்னர் கொடி அவன் ஆனான்), நகைச்சுவையாகப் பேசுதல் (சூரிய கிரகணம், சந்திரகிரகணம் பிடித்தால் விடும். பாணிக் கிரகணம் பிடித்தால் விடாது) போன்ற பலவற்றைக் கூறலாம். நூலைப் படித்து முடித்ததும் கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவைக் கேட்டு முடித்ததுபோல் இருக்கிறது.
—
நீதிமன்றங்களில் தமிழ், வி.ஆர்.எஸ். சம்பத், சட்டக்கதிர் பதிப்பகம், சென்னை-28, பக்.283, விலை 400 ரூ.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழும் வழக்கு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அங்கீகரிக்கவேண்டிய அவசியம் குறித்து ஏ.ஆர். லட்சுமணன், ஏ.கே. ராஜன், எஸ்.ஜே. முகோபாத்தியாயா, எப்.எம். இப்ராஹிம் கலிபுல்லா உள்ளிட்ட பிரபல நீதிபதிகள், ஆர்.காந்தி, ஜி.மாசிலாமணி, ஆர். விடுதலை போன்ற மூத்த வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பலரும் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது. உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தமிழிலும் நடைபெற சட்டரீதியான சிக்கல் எதுவும் இல்லை என்பதையும், 1963-ஆம் ஆண்டின் ஆட்சி மொழிச் சட்டத்தின்படி இதற்கு சட்ட ரீதியான வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதையும் பல கட்டுரையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தான் தொடர்ந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற வாதத்தின்போது வழக்குரைஞர்களும், நீதிபதிகளும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை அந்த வழக்கைத் தொடர்ந்தவருக்கு உள்ளது என்பதை வலியுறுத்துவதாக பல கட்டுரைகள் உள்ளன. மேலும், சட்ட நூல்கள் அனைத்தையும் தமிழில் கொண்டுவருவது, மாநில சட்ட ஆணையம் உருவாக்குவது, வழக்குரைஞர்களுக்கு தமிழில் வாதாடப் பயிற்சி, நீதிமன்ற ஊழியர்களுக்குப் பயிற்சி என தமிழை வழக்காடும் மொழியாக நடைமுறைக்குக் கொண்டு வரும் முன் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் பலவற்றைக் குறித்தும், நீதிமன்ற மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்தும் நூல் விவரிக்கிறது. நன்றி: தினமணி 29-10-2012