கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு
கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு, தோழமை பதிப்பகம், சென்னை, விலை 159ரூ.
தமிழ்த்திரை உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு இந்தப் புத்தகம். 1958 ஜனவரி 23ந்தேதி மதுரையில் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண்ணை சந்திக்கிறார் சந்திரபாபு. கண்டதும் காதல் கொள்கிறார். அந்த ஆண்டு மே 29ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் சந்திரபாபு ஷீலா திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த பிறகுதான், ஏற்கனவே தான் ஒருவரை காதலித்த தகவலை சந்திரபாபுவிடம் வெளியிடுகிறார் ஷீலா. இதனால் சந்திரபாபு மனம் உடைந்து போனாலும் காதல்களை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். அதன்படி ஷீலாவை லண்டனுக்கு அனுப்பி வைக்கிறார். அதன்பின் சந்திரபாபுவின் வாழ்க்கையே தடம் மாறுகிறது. மதுவுக்கு அடிமையாகிறார். இந்த விவரங்களை மனதைத் தொடும்படி விவரித்துள்ளார் நூலாசிரியர் நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா. சந்திரபாபுவின் இறுதிக்காலம் துயரம் நிறைந்தது. மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தன் டைரக்ஷனில் உருவாக்க முடிவு செய்கிறார். கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு அட்வான்சும் கொடுக்கிறார். ஆனால் படம் எடுக்கப்படவில்லை. நிறைவேறாத கனவுகளுடன் இறந்துபோனார் சந்திரபாபு. திரையில் பெரும் புகழ் பெற்றவர்களின் மறுபக்கம் சோகமயமானதாக இருப்பதை சந்திரபாபுவின் வாழ்க்கை புலப்படுத்துகிறது. படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.
—-
வட்டியை ஒழிப்போம், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, விலை 40ரூ.
பொருளியல் அறிஞர் டாக்டர் எம். உமா சாப்ரா ஆங்கிலத்தில் எழுதிய நூடிலை, வட்டியை ஒழிப்போம் என்ற தலைப்பில் ஆதிரை அஹ்மத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். வட்டியை இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 13/5/2015