கழிசடை
கழிசடை, அறிவழகன், அலைகள் வெளியீட்டகம்.
கும்பிட வேண்டியோரை எள்ளி நகையாடுகிறோம் எழுத்தாளர் அறிவழகன் எழுதிய கழிசடை நாவலை, அண்மையில் படித்தேன். அலைகள் வெளியீட்டகம் பதிப்பித்துள்ளது. நகர்ப்புறத்தில் மலம் அள்ளும் அருந்தியர் வாழ்க்கையை, இந்நாவல் சித்தரிக்கிறது. மலம் அள்ளும் தொழிலாளியின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை விவரித்துக் கொண்டே செல்லும் நாவல், மலம் அள்ளும் தொழிலாளிக்கு ஒவ்வொரு நாளையும் கடத்துவதே வாழ்கையின் வெற்றி என சொல்கிறது. மலம் அள்ள சென்றாலோ, சாக்கடைகளின் அடைப்புகளை எடுக்க சென்றாலோ, அவர்களை மனிதனாக நடத்தி, வேலை வாங்கும் சூழல் இல்லை. சாக்கடைகளை அவர் சுத்தம் செய்யவில்லை என்றால், நம்மால் தொடர்ந்து அங்கு குடியிருக்க முடியாது. ஆனால் அந்த வேலை செய்பவர்களைப் பார்த்ததும் ஏதோ பார்க்கக்கூடாத ஒன்றை பார்த்துவிட்டதாக ஒதுங்கிச் செல்கிறோம். மலம் அள்ளுபவன், அவனது வாழ்க்கையை நடத்த, வேலை செய்ய வருகிறான் என்றாலும், அவனுக்கென, மனசு, உறவு, வாழ்க்கை இருப்பதாக யாரும் கவலைப்படுவதே இல்லை. சமூகத்தில் அவனை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ, அந்தளவுக்கு அசிங்கப்படுத்துகிறோம். கழிசடை நாவலின் வரும் கதாநாயகனுக்கு வாரிசு இருக்கிறது. அந்த வாரிசும், தன்னைப்போல மலம் அள்ள வேண்டுமா? என நினைக்கும் கதாநாயகன், அவனை வேறு தொழிலுக்கு அனுப்ப முயற்சித்து தோற்கிறான். வேறு வழியில்லாமல், வாரிசும் மலம் அள்ளும் வேலைக்கு வந்து, உயிரையும் விடுவது, கண்ணீர் மல்க வைக்கிறது. இந்த துயரங்களை தாங்கி, வாழ்க்கையை மீண்டும் நகர்த்த, கதாநாயகன் விளைகிறான். இப்படியாகச் செல்கிறது கழிசடை நாவல். ஒரு நாவலின் கதைக் களம் அக்ரஹாரமாகவோ, வயல் வெளியாகவோ, இன்ன பிற தளங்களிலோ இல்லாமல், சமூகத்தில் பிறர் நலனுக்காக உழைக்கும் துப்புரவு தொழிலாளியின் வாழ்வை சித்தரிக்கும் களமாக, கழிசடைகள் நாவல் உள்ளது. நமது சுற்றுச்சூழலை மேம்படுத்தும் தொழிலாளியை, நாள்தோறும் நாம் செல்லும் பாதையில் பார்க்கும்போது கையெடுத்து கும்பிட வேண்டும். ஆனால் அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறாம். இந்த வலியை அறிவழகன் வெளிப்படுத்தியுள்ளது சமூகத்தின் நிதர்சனம். -ஜோ.டி.குரூஸ். எழுத்தாளர். நன்றி: தினமலர், 20/7/2014.