கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு
கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, டாக்டர் லக்ஷ்மி விஸ்வநாதன், சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ.
எல்லா நோய்களுக்கும் மூல காரணம் மனக்கவலையே. இது அதிகரிக்க அதிகரிக்க அது மன அழுத்த நோயாக உருமாறுகிறது. இந்த மன அழுத்தம் உருவாக பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையானது, தாழ்வு மனப்பான்மையே. இதை வெற்றி கொள்ள எதையும் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வது மிக அவசியம் என்பது மனநல மருத்துவர்களின் கருத்தாகும். நற்சிந்தனை மற்றும் நல்ல செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த தன்னம்பிக்கையைப் பெற முடியும் என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கம். அதற்கான வழிமுறைகளை மனநல மருத்துவரான இந்நூலாசிரியர் இந்நூலில் கூறியுள்ளார். ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்வது. எதிர்மறையான மனிதர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது. தோல்விகளை ஏற்றுக்கொள்வது. வேலையாட்களிடம் நமது அணுகுமுறை. தள்ளுபடி விற்பனையில் சாமான்களை வாங்குவதை தவிர்ப்பது. நன்றியை எதிர்பார்க்காமல் இருப்பது. யாருடனாவது ஒத்துப் போகவில்லை என்றால் வருதப்படாமல் இருப்பது இப்படி சுமார் 400 தலைப்புகளில் நம்மை நாமே சீர்திருத்தி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை இந்நூலில் தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக்கியுள்ளார். இதில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் நாம் அறிந்ததுதான் என்றாலும், இவர் கூறியுள்ள விதம் புதுமையாகவும், அவற்றைப் பின்பற்றும்படியாகவும் இருப்பது பாராட்டத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக், 3/12/2014.