கவிதை அலைவரிசை
கவிதை அலைவரிசை, பேராசிரியர் இரா. மோகன், விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41, பக்கங்கள் 168, விலை 120ரூ.
கவிதைகளை ஆய்வு செய்வது என்பது கவிதைகள் எழுதுவதைவிட கடினமானது. முனைவர் தமிழண்ணல் சொன்னதுபோல், இத்தனை கவிஞர்களையும் அவர்களின் அத்தனை கவிதைகளையும் படித்து ஆய்வு செய்ய இவருக்கு மட்டும் நேரம் எங்கே இருந்து கிடக்கிறது. சமகாலக் கவிஞர்கள் பதினெட்டுப் பேரின் கவிதைகளை மக்களுக்கு புதிய கோணத்தில் எடுத்தியம்பும் முயற்சி இது. கவிஞர் குலோத்துங்கன், கவிஞர் கா. வேழவேந்தன், சிற்பி, கல்யாண்ஜி, பழநிபாரதி உள்ளிட்ட பதினெட்டுக் கவிகளின் ஆளுமையும் கவிவீச்சையும் கவிதைகளின் உண்மைப் பொருளையும் படிப்போர் உணர கொண்டு செலுத்தியுள்ளார். தமிழ்க் கவிதை உலகிற்குள் பிரவேசிக்கும் புதியவர்களுக்கு கவிதை அடிலைவரிசை ஒரு நல்ல வழிகாட்டி.
ஒலிக்காத இளவேனில், தான்யா, பிரதீபா கனகா, தில்லைநாதன், வடலி பதிப்பகம், 13/54, 10வரு குறுக்குத் தெரு, ட்ரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை 24, பக்கங்கள் 172, விலை 135ரூ.
ஈழப் பெண்கள் பலரின் மௌனக் கொந்தளிப்புகள்தான் இக்கவிதைத் தொகுப்பு. இப்பெண்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்பவர்கள். போர் நிகழ்வுகளால் ஈழமக்களுக்கு ஏற்பட்டுள்ள வலி வேதனைகளை உறைபடிவமாக்கியுள்ளனர். புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் ஈழம் என்ற சொல்லின் நிஜமும், நிழலுமாக, ஈழத்தை எப்போதும் உயிரில் உணர்வில் இயற்றிக் கொண்டிருக்கும் ஈழப்பெண்களின் இலட்சிய சிருஷ்டி இவை. இச்சூழலிலும் தம் ஈழ இனத்தின் கலாச்சாரங்களை அடையாளங்களை விடாது பேணிக்காத்து, தாய்த்தமிழில் தம் மனவுணர்வுகளை கவிதைகளாகப் படைத்திருக்கிறார்கள். நன்றி: குமுதம், 20 பிப்ரவரி 2013.