காகிதப் படகில் சாகசப் பயணம்
காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
வலியே மகிழ்ச்சி தமிழ்ப் பத்திரிகையுலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிது புதிதாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. பத்திரிகையாளனின் கருவிகளான எழுத்து நடை, சொற்சிக்கனம், மொழிவளம், சிந்தனைத் திறன், புதுமை தேடும் மனப்பாங்கு, வாசகர்களைச் சென்று சேரத் தேவையான எளிமை ஆகிய அனைத்தும், ஒவ்வொரு பத்தாண்டும் மாற்றமடைந்திருக்கின்றன. பத்திரிகையாளரான பெ. கருணாகரன் எண்பதுகள், தொண்ணூறுகள், புதிய நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் ஆகியவற்றில் வேறு வேறு தமிழ் இதழிகளில் பணியாற்றியவர். இவற்றில் அந்தந்தக் காலங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், மாற்றங்கள் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்து, அந்த அனுபவங்களை இந்த நூலில் தொகுத்தளித்துள்ளார். முதல் வாசிப்பில் இவை சுவாரசியமாக இருக்கின்றன என்பதோடு மீண்டும் வாசிக்கும்போது, காலமாற்றத்தைப் பதிவு செய்வதாகவும் அமைந்திருக்கின்றன. அதேபோல் இவர் பழகிய பத்திரிகையுலக முக்கியஸ்தர்கள் எப்படியெல்லாம் இவருக்கு நல்லதாகவும் அல்லதாகவும் வழிகாட்டினார்கள் என்பதை ரொம்ப நாசூக்காகவும் வெளிப்படுத்தி இருக்கிறார். மாலன் கோபப்படுவதைப் பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது. இளம் பதத்திரிகையாளர்கள் எப்படி இதழியல் பணியை ஒரு தொழிலாகப் பார்க்க வேண்டும் என்பதை மாலன் வலியுறுத்தும் அற்புதமான கடிதம் அது. அதேபோல் சுஜாதாவின் ஞாபக மறதி, குடும்பத்தைவிட இதழியல் பணிகள் எடுத்துக்கொள்ளும் முன்னுரிமை என்று பல செய்திகளைப் பதிவு செய்தள்ளார் பெ. கருணாகரன். வாசகர்களுக்கு இந்த வலிகள் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவைதான் பத்திரிகையாளனுக்கு மகிர்சசி. -ஆர்.வி. நன்றி: கல்கி, 23/11/2014.