காணாமல் போன கவிதைகள்
காணாமல் போன கவிதைகள், நெப்போலியன், தங்கதாய் வெளியீடு, புதுக்கோட்டை, விலை 40ரூ.
நெப்போலியன் கவிதைகளைச் சமூக அக்கறை, கரிசனம் என்று சொல்ல முடியும். நெப்போலியன் காணாமல் போன கவிதைகள் தொகுப்பில் சுருக்கமாகவும் நேரிடையாகவும் பேசுகிறார். மனதில் பட்டதை மட்டும் இவர் எழுதவில்லை. சமூகத்திற்கு எவை தேவையோ, எவற்றைச் சொல்ல வேண்டுமோ அவற்றைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். வடிவ ரீதியான பரிசோதனைக்காக நெப்போலியன் கவிதைகளை எழுதவில்லை. மாறாக முற்றிலும் நகரமயமான வாழ்வின் நெருக்கடிகள், நவீன வாழ்வின் அபத்தங்கள் போன்றவையே கவிதைகள் ஆகியிருக்கின்றன. தான் பார்த்ததை, அனுபவித்ததை, வாழ்ந்ததை எழுதியிருக்கிறார். இன்று நாம் நம்முடைய பெருமையாகப் பேசுகிற, விளம்பரப்படுத்திக்கொள்கிற, சாதி, மத, இன அடையாளங்கள் உண்மையில் பெருமைப்படக் கூடியதுதானா என்று ஆறாம் அழிவு என்ற கவிதை கேள்வி எழுப்புகிறது. கற்பனையை எழுதுகிற எழுத்தை விட நிஜத்தை எழுதுகிற எழுத்துக்கு அதிக வலிமை உண்டு. இப்படி வலிமை நிறைந்த கவிதைகளான வேடம், ஆத்தா, காயம், நாற்காலி, வாசல், நிறம், விளிம்பு, கறியாடுகள், மாற்றத்தின் காற்று போன்ற பல இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. வார்த்தைகள், சொற்கள் என்பவை எவ்வளவு முக்கியமானவை? சொற்களின் இயல்பை, தன்மையை, அதன் உண்மையான பொருளை உணர்ந்துதான் பேசுகிறோமா, எழுதுகிறோமா என்று ஒரு கவிதை கேட்கிறது. நகர மயம், தொழில் மயம், நவீன மயம், உலக மயம் என்பதெல்லாம் எப்படி மனிதர்களைத் தனித்த அடையாளமற்றவர்களாக, பணம், பொருள் என்பதைத் தாண்டி சிந்திக்க மறந்தவர்களாக, சுய அடையாளங்களைத் துறந்தவர்களாக எப்படி மாற்றியிருக்கிறது? மனிதனும் இன்று ஒரு பொருள்தான், பொருள்களை மட்டுமே தேடுகிற மனிதன், என்று ஒரு கவிதை நிரூபிக்க முயல்கிறது. இதெல்லாம் முக்கியமான விஷயமா என்று நாம் எளிதில் ஒதுக்கித் தள்ளி விடுகிற, புறக்கணித்துவிடுகிற, அலட்சியப்படுத்துகிற பல விஷயங்கள்தான் நெப்போலியனின் கவிதைக்கான மையமாக இருக்கிறது. நிகழ்காலப் பிரச்சினைகளை மட்டுமே பேசுவது இத்தொகுப்பின் சிறப்பு. தனி மனிதனின் கண்ணீரைவிட, துயரத்தைவிட, இழப்பை விட சமூகத்தின் கண்ணீர், துயரம், இழப்பு முக்கியமானது அந்த வகையில் நெப்போலியன் சமூகத்தின் எழுத்தாளராக இருக்கிறார். -இமையம். நன்றி: தி இந்து.