காந்தியைக் கடந்த காந்தியம்
காந்தியைக் கடந்த காந்தியம், பிரேம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 240ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-925-9.html மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் இன்னம் உயிரோடு இருப்பதைப்போலவே அவர் பெருங்கூட்டத்தால் பாராட்டப்படவும் விமர்சிக்கப்படவுமாக இருக்கிறார். இது வேறு எந்த ஆளுமையும் அடைய முடியாத பெருமை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கும் செய்தி இருக்கிறது. தத்துவவாதிகளுக்கும் விஷயம் இருக்கிறது. இதுதான் அவருடைய வெற்றிக்கு அசைக்க முடியாத அழுத்தமான காரணம். காந்தியவாதிகளால் மட்டுமல்ல, மார்க்சிஸ்ட்களும் பெரியாரியவாதிகளுக்குமே காந்தியிடம் ஆதரிக்க கோட்பாடுகள் உண்டு. காந்தியவாதிகள் கரைந்து போய்விட்ட நிலையிலும் காந்தி பேசப்படுவது இதனால்தான். அவரைப் பற்றி பின்நவீனதத்துவ சிந்தனைகளின் அடிப்படையில் பிரேம் எழுதியுள்ள புத்தகம் இது. தமிழ்ப் படைப்பு இலக்கியத்தைக் கோட்பாடுகள் அடிப்படையில் விமர்சித்து தொடர்ந்து எழுதிவருபவர் பிரேம். அம்பேத்கார், அயோத்திதாசர் எழுத்துக்களை முன்னெடுத்து வருபவர். காந்தியைப் பற்றி எழுத ஆரம்பித்திருப்பது கவனிக்கத்தக்கது. பிற்போக்காளர், நவீனத்தின் பகைவர், பழமைவாதி, தந்திரமான அரசியல்வாதி, இந்து மதத்தை மறுகட்டமைப்பு செய்யும் மதவாதி என்று கொச்சைப்படுத்தப்பட்டவர் காந்தி. இது காந்தியத்தின் மீதான குற்றச்சாட்டு. ஆனால் காந்தியப் பண்புகளை என்னால் பயனற்றவை என்று ஒதுக்கிவிட முடியவில்லை என்ற எளிமையான அறிமுகத்துடன்தான் இந்தப் புத்தகத்தை பிரேம் தொடங்குகிறார். காந்தியைப் புனிதராகக் கருதி ஒதுக்கிவிடக்கூடாது. அவர் முரண்பாடுகள் கொண்டவர்தான். அந்த முரண்பாடுகளை உணர்ந்தே அவரைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார். சாதி என்பதைவிட தனிமனிதப் பண்புகளுக்கு முன்மதிப்பு தருவதன் மூலமாக காந்திக்குள் நவீனத்தன்மை இருந்ததாக அடையாளம் காட்டுகிறார். அதற்குக் காரணம் ஆரம்பத்தில் இருந்தே இனம், மொழி, பண்பாடு ஆகிய பன்மை அடையாள ஏற்பு அவரிடம் இருந்தது. சாதாரண மோகன்தாஸை, மகாத்மா என ஆக்கியது கடையனுக்கும் கடைத் தேற்றம் என்ற புத்தகம் மட்டுமல்ல, வில்லியம் மென்கின்டைர் சால்டர் எழுதிய அறம்சார் மதம் என்ற புத்தகம்தான் என்பதையும் பிரேம் சுட்டிக்காட்டுகிறார். ஆயுதமற்ற எளிய மனிதர்கள், இயந்திரங்கள் அற்ற எளிய உற்பத்தி, மனித உடலை மையமாகக் கொண்ட அரசியல், தன்னைத் தருதலில் உருவாககும் எளிய இன்பம் என்பவற்றைப் பற்றிக் கனவு கண்ட அந்த எளிய மனிதர் உருவ முரணாக ஒரு பெரும் தேசத்தின் குறியீடாக மாறியிருக்கிறார். காலத்துக்கு வெகு முன்பே ஒற்றை மைய அரசியல், அழித்தொழிப்பு தொழில் நுட்பங்கள், மூலதனக் கொடுங்கோன்மை, இயந்திரமய உற்பத்தி என்பவை விடுதலையோ, வளர்ச்சியோ இல்லை. அவற்றில் இருந்து எதிர்காலத்தை மீட்டெடுப்பதுதான் உண்மையான விடுதலை என்பதைக் கூறிச்சென்ற அந்த மனிதர் காலமுரணாகவும் நிற்கிறார். இனியான மாற்றுகளின் கனவுகளுக்கு ஒரு எளிய முன்னோடியாக என்று பிரேம் எழுதுவதுதான் இந்தப் புத்தகத்தின் மொத்த சாராம்சம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 9/3/2014.