காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம்
காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம், டி. ஞானையா, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை 41, பக். 232, விலை 175ரூ.
தனது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார் என்றும் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளாலேயே அவர் பிரிவினைவாதியாக மாறினார் என்றும், பிரிவினை கோஷத்தைக்கூட அதிக அதிகாரங்கள் பெறுவதற்கான உபாயமாகவே அவர் கருதினார் என்றும் எழுத்தாளர் தின்கர் ஜோஷி, பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பலரின் நூல்களில் இருந்து நூலாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். இந்தியா என்பது ஒரு தேசமல்ல, கற்பிதம் செய்யப்பட்டது, பிரிந்து செல்லும் உரிமை அளிக்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்திருக்காது என்பன போன்ற பல கருத்துகளை பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார். அரசியல் நிகழ்வுகளுடன் ஜின்னாவின் சோகமயமான தனிப்பட்ட வாழ்க்கையும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. சில கருத்துகளை மீண்டம் மீண்டும் கூறுவதையும் எழுத்துப் பிழைகளையும் தவிர்த்திருக்கலாம். வரலாற்றுச் சம்பவங்கள் கோர்வையாகவும், எழுத்து நடை எளிமையாக அமைந்திருக்கக்கூடும். கடந்த கால வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் படிப்பதற்கு ஏற்ற நூல். நன்றி: தினத்தந்தி, 15/7/13.
—-
இன்மை அனுபூதி இலக்கியம், மா. அரங்கநாதன், நேர்காணல்-எஸ். சண்முகம், புது எழுத்து, 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டனம் 635112, பக். 128, விலை 150ரூ.
நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். ஆனால் இது படைப்பின் மூலமான படைப்பாளியை நம்முன் தரிசனப்படுத்தும் முயற்சி. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை போன்ற நேர்காணலும் படைப்பாக்கத்தின் இன்னொரு கிளைதான் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறது இந்நூல். கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப படைப்பாளியே பேசவேண்டிய கட்டாயம். அதில் படைப்பாளிக்கு இருக்கும் எல்லையை எப்படி வரையறுக்கலாம்? சிறுகதையை கவிதையின் விளக்கப்படம் என்று சொல்லலாமா? மரபு, நவீனம் போன்றவைகளுக்கு படைப்பாளியாக ஒருவரின் மதிப்பீடு என்ன? இப்படி பல கேள்விகளின் மூலம் நமக்கு படைப்பின் மூலமாக மட்டுமே அறிமுகமான மா. அரங்கநாதன் என்னும் படைப்பாளியின் உள் மனதைக் காட்டுகிறார் பேட்டியாளர். படைப்பாளரின் இளமைக்கால அனுபவங்கள், பிறந்த ஊர் பற்றிய நினைவுகள், எழுத்து அனுபவங்கள், இலக்கிய நண்பர்களுடனான அனுபவங்கள், வைதீக மறுப்பு தொடர்பான தத்துவப் பின்னணி, நவீன இலக்கியம் குறித்த கருத்துகள், மரபிலக்கியம் என விரிவான நேர்காணலுடன் வெளிவந்திருக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 15/7/13.