காலத்தின் திரைச்சீலை
காலத்தின் திரைச்சீலை, டிராட்ஸ்கி மருது, தொகுப்பு-அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 280, விலை 300ரூ.
தமிழ் ஓவிய மரபில் நெடுவழிப்பாதை ஒன்றை உருவாக்கி அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஆளுமையைத் தொகுத்துத் தரும் நூல். விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, அழுத்தமான தன்னுடைய கோடுகளின் மூலம் தமிழ்க் கலை உலகை அடையாளப்படுத்துவதில் முன் நிற்கும் மருதுவின் வாழ்க்கைப் பதிவுகள், ஒரு ஆவணப் பதிவாக மட்டுமாகிவிடாமல், உயிரோட்டத்துடனான செயலாகவும் ஆக்கியதில் அ.வெண்ணிலாவின் பங்கு அதிகம். கட்டுரைகளை வாசிக்கும்போது கண்முன் வந்து போகும் மருதுவின் கோடுகளில் தெரியும் உயிர்ப்பு காலம் கடந்து நிற்கும். நன்றி: குமுதம், 30/4/2014.
—-
சங்க காலத் தொழில் நுட்பம், பேராசிரியர் த. சாமிநாதன், அன்னம், தஞ்சாவூர், பக். 195, வி9லை 160ரூ.
உலக அரங்கில் தமிழர்கள் துறைதோறும் தொழில் நுட்பங்களில் சிறந்து விளங்கியவற்றை ஆய்வு செய்வதால் இந்நூல் கவனத்திற்குரிய நூலாகிறது. சங்க இலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, மக்களுக்கு உயிர்த் தொழிலாக விளங்கும் பயிர்த் தொழில், மானம் காக்கும் நெசவுத் தொழில், கட்டுமானவியல், மண்பாண்டத் தொழில், இரும்புத் தொழில், பொன் தொழில், கடற் தொழில், தோல் பதனிடுதல், கண்ணாடி, தீக்கனக்கோல், மகளிர் ஒப்பனை, மது தயாரித்தல், கற்பூரம் தயாரித்தல் என்று பல்வேறு தொழில் நுட்பங்களையும் அதன் வழி பயன்பட்ட கருவிகள் பற்றிய செய்திகளையும் வாழ்வியலோடு இணைத்து ஆய்ந்துள்ளார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 30/4/2014.