கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள்
கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 416, விலை 330ரூ.
தமிழக அரசின் அனைத்து துறைகள் குறித்து முழு விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி, வெளிநாட்டு கல்வி வழிகாட்டி என்று மக்களுக்கு பயனுள்ள பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளவர் இந்நூலாசிரியர். அதே முறையில் இந்நூலையும் உருவாக்கியுள்ளார். ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு உள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகள் போன்றே, ஒரு கிராமத்தை நிர்வகிக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் (வி.ஏ.ஓ) உள்ளது என்பதை இந்நூல் விளக்குகிறது. அதாவது ஒரு கிராம நிர்வாக அலுவலர், தனது கிராமத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள், கிராம மக்களுக்கு வழங்க வேண்டிய சான்றிதழ்கள், பட்டா வழங்குவதற்கான அல்லது மாற்றுவதற்கான ஒப்புதல், வரி வசூல், பேரிடர் உதவிகள், சட்டம் ஒழுங்கு கண்காணிப்பு, அரசு சொத்தை பாதுகாத்தல், கிராம சுகாதாரம், மருத்துவ முகாம் ஏற்பாடு, நீர்ப் பாசனத்தை முறைப்படுத்துதல், அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல், நிலநிர்வாகம், பதிவேடுகளை பராமரித்தல், ஜமாபந்தி ஏற்பாடு, காவல் கடமைகள்… இப்படி கிராம நிர்வாகம் குறித்து ஏராளமான பணிகள் உள்ளன. அவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் தொகுத்து, மூன்று பாகமாகப் பிரித்து, என்னென்ன பணிகள் எந்தெந்த அரசு ஆணையின் கீழ் வருகிறது, அவற்றை செயல்படுத்தும் முறைகள் என்ன என்று மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. இது வி.ஏ.ஓ.வாகப் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமல்ல, தேர்வு எழுதி இப்பணியில் சேரவிரும்புபவர்களுக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாக விளங்கும் என்பது திண்ணம். -பரக்கத். நன்றி: துக்ளக், 13/1/2016.