குமரகுருபரரின் தமிழ் உள்ளம்
குமரகுருபரரின் தமிழ் உள்ளம், ந. முருகேசன், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613010, பக்கங்கள் 94, விலை 80ரூ
குமரகுருபரரின் தமிழ்ப்பற்று அளவிடற்கரியது. அருந்தமிழ், செழுந்ததமிழ்த் தெள்ளமுது, சொற்களை பழுத்த தொகைத்தமிழ், புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழ், இசை முத்தமிழ் என்றெல்லாம் அகங்குளிரப்பாடி 17ஆம் நூற்றாண்டில் தமிழை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றியவர். பக்தி மணமும் பைந்தமிழ் மணமும் கமழும் நூலாக இது திகழ்கிறது. இவ்வாறு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை வழங்கியுள்ள அணிந்துரை இந்நூலுக்கு அணி சேர்த்துள்ளதை வழிமொழிந்தே ஆகவேண்டும். குமரகுருபரரின் தமிழ் உள்ளம், குருபக்தி, கவிதை நாட்டம், கல்வியின் பயன், கற்றபடி ஒழுகுதல், தொண்டுள்ளம், தற்புகழ்ச்சி, விரும்பாமை, தன்மானத்துடன் வாழ்வதற்கான அறிவுரைகள், முயற்சியின் பயன், பெரியோரை இகழாமை, பொய் வேடம் தவிர்த்தல் முதலிய பல்வேறு சிறு சிறு உள் தலைப்புகளைக் கொண்டு குமரகுருபரரின் தமிழ்ப் பற்றை விளக்கியுள்ளத. பக்தி இலக்கியம் என்றவுடன் நினைவு கூர வேண்டிய பல அருளாளர்கள் வரிசையில் சட்டென நினைவுக்கு வரவேண்டியவர் குமரகுருபரர். காரணம் மதுரை மீனாட்சி அம்மையே தன் மடியில் அமர, தீந்தமிழில் பாக்களை இயற்றி, அவளைத் தமிழால் அலங்கரித்து மகிழச் செய்து, அழகு பார்த்த பைந்தமிழ்க் காவலர். தமிழின்பமும் இறையின்பமும் பெற விழையும் அன்பர்கள் வாசிக்க வேண்டிய தமிழ்மறை.
—–
குறிஞ்சிப்பாட்டில் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பண்ரூட்டி 607106, பக்கங்கள் 272, விலை 300ரூ
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு. சங்கத் தொகை நூல்களுள் மிகுதியான பாடல்களைப் பாடியவ்ர் கபிலர்தான். அவற்றுள் மிகுதியானவை குறிஞ்சித் திணையைச் சார்ந்தவை என்பதாலும், குறிஞ்சித் திணைப் பாடுவதில் இவர் வல்லவர் என்பதாலும் கறிஞ்சி கபிலர் என்றே போற்றப்படுகிறார். குறிஞ்சித் தலைவிக்கும் தோழிக்குமிடையே நடைபெறும் நிகழ்வை விரித்துரைக்கிறது இந்நூல். இதில் 112 தாவரங்களின் வகைகளைப் பட்டியலிட்டு அவற்றில் 35 தாவரங்களுக்குப் புறத்தோற்ற அடைமொழிப் பெயர்களையும் தந்துள்ளார் நூலாசிரியர். மேலும் 102 பூக்களின் பெயர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். குறிஞ்சி; நன்றி: தினமணி 04 பிப்ரவரி 2013.
—-
மாணவர்களுக்கேற்ற கரும்புக் கதைகள், லூர்து எஸ். ராஜ், ஸ்ரீசெல்வ நிலையம், 32/1, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 75ரூ
30 சிறுகதைகளின் தொகுப்பு இந்த புத்தகம். ஒவ்வொரு சிறுகதையிலும் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் மனதை நெகிழ்ச்சியடைய செய்கின்றன. அறிவின் வெற்றி, நண்டு ஊமையானது போன்ற சிறுகதைகள் சுவாரசியமாக உள்ளன. நன்றி: தினத்தந்தி, 07 மார்ச் 2012.