பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்)
பொதுதமிழ் (மாதிரி வினா விடைகள்), சி.கலை சின்னத்துரை, விகடன் பிரசுரம், சென்னை 2, பக்கங்கள் 248, விலை 150ரூ
உங்கள் தமிழ் அறிவை பட்டை தீட்டும் களம், என்றும் பாடத்திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்ட துல்லியப் பதிவு என்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,4, யு.பி.எஸ்,சி.டி.இ.டி., வி.எ.ஓ, போட்டித் தேர்வுகளுக்கான அடிப்படைக் கருவூலம் என்றும் நூலின் அட்டையில் குறிப்பு உள்ளதால் உள்ளே இருக்கும் விவரங்கள் எவையென்பது சொல்லமலேயே விளங்கும். இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் இளைஞர்களுக்கு சவாலாக இருப்பது போட்டித் தேர்வுகள்தாம். என்னதான் பொது அறிவை வளர்த்துக் கொள்ள பல நூல்களைத் தேடிப் படித்தாலும் குறிப்பிட்ட சில தேர்வுகளுக்கென்று பொது அறிவு நூல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றைப் படிப்பது, எழுதவிருக்கும் தேர்வுகளுக்கு ஓரளவுக்கு உதவக்கூடும். தமிழக அரசுத்துறை சார்ந்த எந்தத் தேர்வதாக இருந்தாலும் அதில் மிக முக்கியமான பகுதியாக பொதுத்தமிழ் (ஒரு தாள்) இடம்பெறும். இப்பொதுத் தமிழில் இலக்கணம், செய்யுள், உரைநடை, பயிற்சி வினா விடை போன்றவை இருக்கும். மொத்தம் 36 தலைப்புகளில் சங்க இலக்கியம், இலக்கணம், உரைநடை குறித்த பல்வேறு தகவல்களைத் திரட்டி தந்திருக்கிறார் நூலாசிரியர். இது போட்டித் தேர்வுக்கு மட்டுமல்ல. தமிழ் மொழியில் புலமை பெறவும், பிழையின்றித் தமிழை எழுதவும் படிக்கவும் விரும்புவர்களிடம் இருக்க வேண்டிய கையேடு.
—-
துளசிதாசரும் துளசிராமாயணமும், எம். சேஷன், எல்.கே.எம். பப்ளிகேஷன், சென்னை 17, பக்கங்கள் 656, விலை 290 ரூ.
வால்மீகி ராமாயணத்தைத் தழுவி எத்தனையோ ராமாயணங்கள் இந்திய மொழிகளில் வந்துவிட்டன. அவ்வாறு இந்தியில் கோஸ்வாமி துளசிதாசர் எழுதிய ராமாயணம் ஸ்ரீராமசரிதமானஸ் என்பது. ஓசை நயமும் பாடலின் கவி நயமும் சிறப்புற அமையப் பெற்ற துளசிதாசரின் இந்த ராமாயணம், வட இந்தியாவில் பெரும் புகழ் பெற்றது. இந்த நூலில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட துளசிதாசரின் வாழ்க்கைக் கதை அவர் காலத்திய சமூகச் சூழல், முகலாய மன்னர்களின் ஆதிக்கம், அதன் நடுவே கிளர்ந்ததெழுந்த பக்தி இயக்கம், துளசிதாசர் இயற்றிய நூல்கள், அவர் கையாண்ட கவி வகைகள் அனைத்தையும் முன்பகுதியில் அலசியுள்ளார் நூலாசிரியர். பிற்பகுதியில் துளசிதாசரின் ராமாயணம் மிக விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காண்டத்திலும் துணைத் தலைப்பிட்டு கதை நிகழ்வுகளின் வரிசையாக இரு வரிக் கவிதைக்கு அதன் விளக்கத்தையும் கதைப் பின்னணியையும் கொடுத்து மிகச் சிறந்த விளக்கத்தை அளித்துள்ளார் நூலாசிரியர். பின்னிணைப்பாக வடநாட்டில் புகழ்பெற்ற ஸ்ரீராமாயண ஆரத்தியின் தமிழாக்கம், ஸ்ரீராம நாம மகிமையைக் கூறும் பாடல், துளசிதாசரின் பக்தித் தத்துவம் அனைத்தும் சிறப்பாக உள்ளன. துளசி ராமாயணமும் துளசிதாசரின் சரித்திரமும் இவ்வளவு விரிவாகத் தரப்பட்டு வெளிவந்திருக்கும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும். நன்றி: தினமணி 04 பிப்ரவரி 2013.