குமரப்பா கலைக்களஞ்சியம்
குமரப்பா கலைக்களஞ்சியம், மா.பா. குருசாமி, மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியீடு.
உள்ளூரில் தோல்வியுள்ள ‘தாய்மை பொருளாதாரம்’ மா.பா. குருசாமி எழுதிய ‘குமரப்பா கலைக்களஞ்சியம்‘ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியிட்டு உள்ளது. எழுத்தாளர் குமாரசாமி, 80 வயது நிரம்பியவர். அவரது 150வது நூல் இது என்பது சிறப்பு அம்சம். ஜே.சி. குமரப்பா காந்தியின் சீடர். தஞ்சையில் பிறந்தவர். 1930களில், பட்டயக் கணக்கர் ஆவதற்கான சி.ஏ. தேர்வில் வெற்றிபெற்றார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், ‘இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் ஐரோப்பிய நாடுகள்’ என்ற தலைப்பில், அவர் ஆற்றிய உரை, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்ஸ்போர்டு பல்கலை பேராசிரியர் ஒருவர், “நீங்கள் காந்தியை சந்தியுங்கள்” என, குமரப்பாவுக்கு அறிவுறுத்தினார். ஆக்ஸ்போர்டு பல்கலையில் தான் வாசித்த உரையுடன், காந்தியை சந்தித்தார் குமரப்பா. ‘மகாராண்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்துக்கு சென்று, ஆய்வு செய்து வா’ என பணித்தார் காந்தி. அதையேற்று ஆய்வை முடித்தார் குமரப்பா. இதைத் தொடர்ந்து காந்தியின் பிரதான சீடரானார். காந்தி சிறை சென்றபோது, ‘யங் இந்தியா’ பத்திரிகையை நடத்தியவர் குமரப்பா என நூல் ஆசிரியர் கூறுகிறார். ‘வளர்ச்சி ஒரு இடத்தில் குவிவதைத் தடுத்து, கிராமங்களில் பரவலாக்க வேண்டும். உற்பத்தி சார்ந்த தொழில்களை மட்டுமே ஊக்குவிக்க வேண்டும். உற்பத்தியில் தற்சார்பு அடைந்த பின்னரே, எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்ய வேண்டும். இதன்மூலமே பொருள்களின் விலையை மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப வைத்திருக்க முடியும். நிலத்திலிருந்து தோண்டி எடுக்கும் கனிம வளத்தொழிலை ஆதரிக்கக்கூடாது. அது ஆதிக்க அரசியலுக்கு இட்டுச் செல்லும்’ என்பன போன்றவை குமரப்பா முன் வைத்த, இந்தியாவின் ‘தாய்மை பொருளாதார’ கருத்துக்கள். இவற்றுக்கு எதிரான பொருளாதார கொள்கைதான் தற்போது இந்தியாவில் உள்ளது. ஆனால் ‘குமரப்பாவின் பொரளாதார கருத்துக்கள், சீனாவுக்கு ஏற்றுமதியாகி வெற்றி பெற்றுஉள்ளது. உள்ளூரிலோ தோல்வியை தழுவி உள்ளது’ என்கிறது நூல். இயற்கை வேளாண்மை, கனிம வள சூறையை தடுப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, இப்போது நாம் முழங்குவதை, 80 ஆண்டுகளுக்கு முன்பே குமரப்பா சொல்லிவிட்டார். நாமோ செவிமடுக்கவில்லை. -தேவேந்திர பூபதி (கவிஞர்) நன்றி: தினமலர், 6/3/2016.