குறிஞ்சிச் சுவை
குறிஞ்சிச் சுவை, ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா, ஜமாலியா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ.
குறிஞ்சிச் சுவையை தமிழர்கள் அறிந்து, புளகாங்கிதம் அடைய விரும்பி ஆசிரியர், மேற்கொண்ட முயற்சிக்கு தமிழகம் முழுவதும் நிச்சயம் பாராட்டு கிடைக்கும். வேழம் ஒன்று சருச்சரை வடிவமான கல் ஒன்றை பிடியெனக்கருதி பேதலிக்கும், கரும்புணக் களித்த புகர் முக வேழம் என்ற பாடலில் ஆசிரியர் அதை விளக்கும் முறை அருமை. தலைவனுடன் சென்ற மனது மீளுமோ என்ற ஐயத்தில் மஞ்ஞையுடன் தன்னை ஒப்பிட்டு, தலைவி ஒருத்தி கூறும் ஐங்குறு நூற்றுத் தகவலும், அதற்கு வண்ணப்படமும் எழில் சேர்க்கிறது. தமிழ் வளர, இம்மாதிரி பலரும் இயல்பாக, ஆரவாரமின்றி சேவை செய்வதை அடையாளப்படுத்துகிறது இந்நூல்.
—-
50 not out மலரும் நினைவுகள், பி.பி. ராமானுஜம், 28340150.
தலைசிறந்த வழக்குரைஞரான ஆசிரியர், தனது 50 ஆண்டுகால தொழில் அனுபவங்களை, நகைச்சுவை உணர்வுடன், இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ் கலந்தமணிப்பிரவாள நடை, 20 ஆண்டுகளுக்கு முன் கலர் டிவி வாங்க தனக்கு கிடைத்த அதிசய பணவரவு, வழக்கு கட்டுகள் தேடும் அளவுக்கு அலுவலகத்தில் குழப்பம் ஏற்பட்டதும், விநாயகரை வேண்டி, அது கிடைத்ததும் சிதறுகாய் போட்டு பிரார்த்தனையை நிறைவேற்றிய அனுபவம் என்று இயல்பாக பல விஷயங்களை, சுவாரஸ்யமாக படிக்க வைக்கும் அவர் நடையை காணலாம். வழக்கறிஞர் தொழிலில் நேர்மையுடன் உழைத்து, சமுதாய அந்தஸ்து பெற்றவுடன் நல்ல நண்பர்கள் பலர் கொண்ட ஒருவரது சிந்தனைகள் தாங்கிய நூல் என்பதைப் படிப்பவர்கள் உணர்வர்.
—-
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள், சோ. சேசாசலம், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 17, பக். 384, விலை 300ரூ.
இன்றைய காலக்கட்டத்தில் சட்ட அறிவு என்பது அதிலும் குறிப்பாக குற்றவியல் சட்ட அறிவு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். குற்றவியல் நீதிமன்றங்களின் அதிகாரங்கள், கைது செய்தல், காவல் துறையின் அதிகாரங்கள், வழக்குகளை விசாரணை செய்தல், தண்டனை வழங்குதல், மேல் முறையீடு, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் இப்படிக் குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள் யாவும் சமீபத்தில் திருத்தங்களையும் உள்ளடக்கி, எளிய தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட, சட்டப் புத்தகங்களைத் தமிழில் தந்துள்ள மூத்த வழக்கறிஞர் சேசாசலத்தின் இந்நூல் சட்ட மாணவர்களுக்கு மட்டுமின்றி சட்டம் அறிந்து கொள்ள விழையும் சாதாரணமானவர்களுக்கும் புரியும்படி, நல்ல முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. நர்மதா பதிப்பகம், வழக்கம்போல அழகிய கட்டமைப்பில் இதை வெளியிட்டுள்ளது நல்ல வரவேற்பைப் பெறும். -பின்னலூரான். நன்றி: தினமலர் 2/6/13.