கூடுகள் சிதைந்தபோது ஆசிரியர் – அகில் பதிப்பு – வம்சி புக்ஸ் சாரோன் திருவண்ணாமலை மு. ப. டிச. 2011 பக்கங்கள் 184 விலை 120ரூ
போரும் புனைவும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அகிலின் கூடுகள் சிதைந்த போது என்ற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் உள்ளன.
ஈழத்தைச் சார்ந்த ஓர் எழுத்தாளர் யுத்தத்தைத் தாண்டி சிந்திப்பபெதன்பது இனி முடியாது என்றே தோன்றுகிறது. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் போர் நெறியைக் கொஞ்சமும் பின்பற்றாத ஈழத்தில் நடந்த மனிதாபமற்ற போர்ச்சூழலையே பேசுகிறது. குறிப்பாக இரண்டு கதைகள் இதில் மிக முக்கியமானவை. அதிலொன்று, ‘பதவி உயர்வு’ இக்கதை யுத்தத்தை நேரிடையாகப் பதிவு செய்யவில்லை என்றாலும் யுத்தத்தின் இழப்பு பெரியது அளவிட முடியாதது என்பதை உணர்த்துகிறது. ஒரு தந்தைக்கும் மகனுக்குமான உறவாக அமையும் இக்கதை, இலங்கை இராணுவத்தின் உயர் பதவியில் இருக்கும் தந்தைக்கு மகனின் இழப்பு அறம் போதிப்பதாக அமைகிறது. மகன் ஒரு தமிழ் இளைஞனுடன் நட்பு வைத்திருப்பதை விரும்பாத தந்தை, மகன் இறந்து போன பிறகு போரை வெறுப்பதாக புனையப்பட்டுள்ளது. இக்கதை சிறுவயதில் படித்த ‘போரை வெறுத்த அசோகன்’ என்ற பாடத்தை நினைவுப்படுத்துகிறது. ஒரு தேர்ந்த சிறுகதை வாசிப்பாளன் இக்கதையில் பிரச்சார தொனி வெளிப்படையாக இருப்பதை எளிதில் கண்டுபிடித்துவிடுவான் என்பதையும் மறைப்பதிற்கில்லை. இத்தொகுப்பின் ரத்தமும் சதையுமான கதையாக இருப்பது தொகுப்பின் தலைப்புக் கதையான ‘கூடுகள் சிதைந்தபோது’ என்ற சிறுகதைதான்.
போரின் உக்கிரத்தை அதன் தளத்திலிருந்து சொல்லும் இக்கதையை ஒரு புனைவாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. தன் மனைவி, அவள் வயிற்றிலிருந்த ஏழு மாதக் குழந்தை என எல்லாவற்றையும் இழந்த ஒருவன் கனடாவிற்குப் புலம்பெயர்கிறான். சாலையில் அடிபட்டு துடித்துக்கொண்டிருக்கும் குருவியைக் காணும்போது இவனுக்கு இவனுடைய குடும்பம் நினைவுக்கு வருகிறது. சங்க இலக்கியத்தில் இந்த உத்தியை அகத்திணையில் பெரும்பான்மையானப் புலவர்கள் கையாண்டிருப்பார்கள். பேரா. கா. சிவத்தம்பி இந்த உத்தி குறித்து தொகுப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார். இப்புனைவைப் போன்று அந்த மண்ணிலிருந்து பல உருவாகியிருந்தாலும் நிறைய இடங்களில் இப்புனைவு வேறுபடுகிறது. போரின் காரணமாக ஏற்பட்ட இழப்பை இக்கதை வர்ணிக்கவில்லை என்பதே இப்புனைவின் சிறப்பு என்று கூறலாம். பேரா. கா. சிவத்தம்பியின் முன்னுரை தொகுப்பைக் குறுக்கு வெட்டாக ஆராய்கிறது. இது தொகுப்பிற்குக் கூடுதல் சிறப்பு. — சு. இரமேஷ் நன்றி: அடவி, ஆகஸ்ட்-செப்டம்பர்