கைம்மண்
கைம்மண், சுதாகர் கத்தக், பார்வை பதிவுகள், 27/53, சின்னக்கண்ணா நகர், சாமி செட்டிப்பாளையம், வடக்கு, ஜோதிபுரம் அஞ்சல், கோயம்புத்தூர், விலை 150ரூ.
உறுதியான கொள்கையுடன், சீரிய கலாசாரத் தளத்தில், விலை போகாதவனாக, சமூகத்தைத் தன் படைப்புகள் மூலம் விமர்சிப்பவனாக இருக்க வேண்டும் தலித் படைப்பாளி. சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் உவப்பானது இல்லை தலித் இலக்கியம். தமிழ்ச் சூழலில், தான் சுதந்திரமாக இருக்கிறோம் என்று படைப்பாளி நினைக்கும்போதே கைதுசெய்யப்பட்டுவிடுகிறான். கைதானதை எதிர்த்துக் குரல் எழுப்புப்போதே குரல்வளை நெறிக்கப்படுகிறது. கோபத்தை வெளிப்படுத்தும்போதே கண்கள் பிடுங்கப்படுகின்றன. இந்த நிலையில் இருந்து தப்பி ஓட எத்தனிக்கும்போதே கால்கள் துண்டிக்கப்படுகின்றன. இத்தகைய கலவரங்களுக்கிடயிலும் மாறுகால், மாறுகை வாங்கப்பட்ட சந்ததிகளின் குரல் வன்மமாய் எங்கும் எதிரொலிக்கிறது. இந்த எதிரொலி உண்டாக்கிய பாதைகளின் வழியே பயணத்தை மேற்கொண்டிருக்கும் தலித் படைப்பாளி, தான் சந்திக்க இருக்கும் சவால்களை எதிர்நோக்கியபடியே பயணித்துக்கொண்டிருக்கிறான் எனும் சுதாகர் கத்தக், தான் சந்தித்த அத்தகைய சவால்களையே களமாகக்கொண்டு எழுதிய கதைகள் இவை. நெய்வேலியில் பிறந்த இவர் வங்கத்து இயக்குநர் ரித்விக் கத்தக் மீதான அபரிமிதமான பற்றின் காரணமாக தனது பெயரை சுதாகர் கத்தக் என்று வரித்துக்கொண்டுள்ளார். காலமாற்றத்தால் காய்ந்து கறம்பை மண்ணாக மாறிக்கொண்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் சாதி வன்மத்தை மட்டும் மாறாமல் காப்பாற்றி வரும் பூமி. அந்த மனித மனங்களைப் பாத்திரங்களாகக்கொண்டு சுதாகர் கதைகளைச் சொல்லி வருகிறார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. படைப்பிலக்கியம் என்கிற கோட்பாட்டினுள் என் (தலித்) வாழ்வு குறித்த அனுபவங்களுடனும் பார்வைகளுடனும் என் சிறுகதைகளை எழுதினேன் என்றுதான் சொல்ல வேண்டும். படைப்பினூடே சமூக உணர்வு, சமூகத்தின் மீதான கோபம் ஆகியவற்றைப் படைப்புக்கே உரிய அளவுடனும் அதன் எல்லையைத் தெரிந்து கொண்டும் மறித்தும் வளைத்தும் என் மனநிலைக்கேற்ப படரவிட்டேன் என்று சுதாகர் சொல்லும் அனைத்துப் படைப்புகளின் உள்ளடக்கமாக இருக்க வேண்டும். இதைத்தான் பூமணி தொடங்கி அழகிய பெரியவன் வரை கனக்கச்சிதமாகச் செய்து வருகிறார்கள். தலித் இலக்கியத்தை தலித்கள்தான் எழுத வேண்டுமா என்பதைவிட முக்கியமானது தலித்கள் எழுதுவது எல்லாம் தலித் இலக்கியம் ஆகிவிடுமா என்பதுதான். அந்த வாழ்வியலை அனுபவிக்காமலேயே அனுபவித்ததாக உருகி எழுதும் எழுத்துக்கள் மலிந்துபோன இந்தக் காலத்தில் சுதாகரின் எழுத்துக்கள் அந்த மக்களின் கண்ணீரை இழை ஆக்கும் கலையைச் செய்திருக்கின்றன. இது சவாலானது. அது சுதாகருக்கு கைவந்துள்ளது. தலித் இலக்கியம் எனது அனுபவம் என்ற கட்டுரை இதில் முக்கியமானது . சுதாகரின் கதைகளை முதலில் படித்துவிட்டு, அவரது இந்தக் கட்டுரையை வாசித்தால் எழுதத் தூண்டுவதாக இருக்கிறது. அடக்கப்பட்ட மனிதர்கள் அனைவரது வாழ்க்கையும் வரலாறுகள்தான். அந்த அடிப்படையில் இது அந்த மக்களின் வரலாறாகவும் இருக்கிறது. -புத்தகன். நன்றி; ஜுனியர் விகடன், 4/9/13.