வம்புக்கு நான் அடிமை
வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை 4, பக். 200, விலை 90ரூ.
நகைச்சுவை உணர்வு நமது மன இறுக்கங்களைத் தளர்த்தும் ஆற்றல் மிக்கது. கடுமையான விஷயங்களையும் கூட நகைச்சுவையுடன் கூறினால், அதில் தொடர்புள்ளவர்களே தன்னை மறந்து சிரித்துவிடுவர். எந்த ஒரு நிகழ்வையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு கடந்துவிட்டால், மனவேதனையிலிருந்து தப்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். நகைச்சுவையை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு இந்நூலை எழுதி இருக்கிறார் ஜே.எஸ். ராகவன். சுமார் 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதிவரும் நூலாசிரியர், சென்னையில் வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகைகளான மாம்பலம் டைம்ஸிலும் அண்ணாநகர் டைம்ஸிலும் எபதிய தமாணா வரிகள் எனும் தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓவியர் நடனம் வரைந்துள்ள படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமாக எழுதப்பட்டிருந்தாலும், நகைச்சுவையே ஆதார சுருதி. சில கட்டுரைகளில் சமகால அரசியலை நையாண்டி செய்திருப்பதில் ஆசிரியரின் அனுபவம் பளிச்சிடுகிறது. சில கட்டுரைகள் சிரிக்க வைக்கவென்றே வம்புக்கு எழுதப்பட்டுள்ளதையும் கூறியாக வேண்டும். அண்டை அயலாரின் வம்புச் செய்திகளை ஆவலோடு எதிர்நோக்கும் மத்தியதர குடும்பப்பெண், மனைவியின் குரலுக்கு மறுபேச்சில்லாத பரமசிவம், மறதியால் தடுமாறிய மாதுஸ்ரீ எனப் பலரை அறிமுகம் செய்யும் போக்கில் சிரிப்பை வரவழைக்க தீவிரமாக முயல்கிறார். படிக்கலாம்.சிரிக்கலாம். நன்றி: தினமணி, 2/9/2013
—-
இனியவை நாற்பது, பேராசிரியர் இரா. மோகன், வானதிபதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக், 164, விலை 100ரூ.
தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, ஆன்மீகம், வாழ்க்கை அனுபவம், கவிதை, நகைச்சுவை என ஆறு உட்பிரிவுகளில் அமைந்த நாற்பது இனிய கட்டுரைகளின் கூட்டுக் கலவையே இந்நூல். படிப்போர் மனதில் தன்னம்பிக்கை துளிர்விடுவதும் விழிப்புணர்வுக்கு அவை தூண்டுகோலாய் இருப்பதும் உண்மையே. ஆன்மீக கட்டுரைகள் மனதில் வெளிச்சம் படர வைப்பவை. குறிப்பாக ஷென்கதை, உமர்கயாம் பாடல்.. கவிமனம் கொண்டோருக்கு கவிதைத்துறைமுகம் நல்ல நுழைவாயில். படிப்போர் மனதை மகிழ்வோடு வருடிக் கொடுக்கிறது நகைச்சுவை நந்தவனம். மொத்தத்தில் கட்டுரைகள் நாற்பதும் இனிக்கின்றன. நன்றி; குமுதம், 26/12/12.