வாரம் ஒரு பாசுரம்
வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html
சுஜாதா, அம்பலம் மின்னிதழிலும் கல்கி வார இதழிலும் எழுதிய பாசுர அறிமுகங்களின் தொகுப்பு இந்த நூல். தமிழ் அழகும் பக்தி ரசமும் சொட்டும் அழகிய பாசுரங்களுக்கு நவீன பாணியில், மொழியில் உரை எழுதியுள்ள சுஜாதா, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல அரிய தமிழ்ச் சொற்களையும் அறிமுகப்படுத்துகிறார். அவருக்கு விருப்பமான பாசுரங்களை எடுத்துக்கொண்டு அதன் இலக்கிய தன்மையை மையப்படுத்தி, ஆழ்வார்களின் பக்திப் பெருக்கை உயர்த்திப் பிடித்து, எளிமையாக அனைவரும் போற்றும்வண்ணம் விளக்கம் தந்துள்ளார். இன்றைய உதாரணங்கள், விளக்கங்கள், ஒப்பீடுகள் என்று ஒரு சில இடங்களிலும் வேறு சில இடங்களில் பாசுரங்களை இன்றைய நவீன கவிதை பாணிக்கு மாற்றி எழுதியும் மக்கள் மனத்தில் பாசுரங்கள் மீது பற்றும் ஆசையும் ஏற்படுத்துகிறார் சுஜாதா. அவரது வாசிப்பின் வீச்சும், பல்துறை அறிமுகமும் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. நகைச்சுவையும் பகடியும் கூட ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. படித்து இன்புறவேண்டிய புத்தகம். நன்றி: செல்லமே, செப்டம்பர் 2013.
—–
பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், மணிவாசகர் நூலகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 125ரூ.
தெரிந்தோ தெரியாமலோ நாம் எழுதும்போதும் பேசும்போதும் ஏராளமாக தவறுகள் செய்கிறோம். ஆங்கில, வடமொழிக் கலப்பு ஒருபுறம் என்றால், பயன்பாட்டில் பல தமிழ்ச் சொற்களையேகூட நாம் பொருளுணர்ந்து பயன்படுத்துவதில்லை. சொற்களுக்கிடையேயும் நிறைய மயக்கம் இருக்கிறது. மொழித்தூய்மை என்பது நோக்கத்தில் இருந்து விடாப்பிடியாகப் பேசுவதைவிட, அழகுத் தமிழைக் கொச்சைப்படுத்தாமல் முறையாகப் பயன்படுத்தினாலே போதும் என்ற சூழ்நிலைதான் இன்று நிலவுகிறது. இந்நூல் அந்த வகையில் நம்முடைய பயன்பாட்டில் ஏற்படும் குளறுபடிகளை எல்லாம் எடுத்து, விரிவான முறையில் மொழியறிவை ஊட்டுகிறது. தொலைக்காட்சியில், வானொலியில், நாளிதழ்கள், பருவஇதழ்களில் காணக்கிடக்கும் பல்வேறு பிழைகளைத் தொகுத்து எழுதப்பட்டுள்ள இந்நூல் அனைவருக்கும் பயன்உடையது. எழுபத்திரண்டு கட்டுரைகள், இலக்கணத்தை வறட்டுத்தனமாகச் சொல்லித் தருவதைவிட, இடம் பொருள் காலச் சூழலை ஒட்டிய எடுத்துக்காட்டுகளோடு பொருத்தீச் சொல்லித்தரும்போது, அதில் சுவாரசியம் கூடுகிறது மனத்திலும் ஆழமாகப் பதிகிறது. எளிமையும் நேரடித்தன்மையுமே இந்நூலின் சிறப்பு. நன்றி: செல்லமே, செப்டம்பர் 2013.