கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ
கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், பக்கங்கள் 304, விலை 145ரூ.
1780ஆம் அணடு சென்னைக்கு ஒரு படை வீரராக இங்கிலாந்திலிருந்து வந்தவர் தாமஸ் மன்றோ. பின்பு அவர் கமாண்டராக, கலெக்டராக, கவர்னராகப் பதவி உயர்வு பெற்றார். அவர் ஆளுகைக்குட்பட்ட சென்னை ராஜதானியின் அன்றைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைகளைப் பற்றி அலண்டனில் இருந்த அவருடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதினார். அவற்றில் உள்ள தகவல்கள் அவர் காலத்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகத் திகழ்கின்றன. தாமஸ் மன்றோவின் கடிதங்களின் அடிப்படையில் அன்றைய கொங்குநாட்டின் சமூகச் சூழ்நிலையை இந்நூலில் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். விவசாயிகளுக்கு நிலத்தை நேரடியாக அளித்து, அதற்கான வரியை அரசாங்கம் நேரடியாக வசூல் செய்யும்ரயத்து வாரிமுறையை மன்றோ அறிமுகப்படுத்தினார். ஒரு முறை பெல்லாரி மாவட்டத்தில் ஆங்கிலேயே துணைக்கலெக்டர் ஒருவர் விவசாயிகளை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்தபோது, அப்போது கவர்னராக இருந்த மன்றோ, மக்களை மதம் மாற்றும் முயற்சி மதகுருமார்கள் சார்ந்த விஷயம். அதிகாரி ஒருவர் மக்களைத் தன் அலுவலகத்தில் கூட்டி மதப் பிரச்சாரம் செய்வது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அக்காலத்தில் நெகவாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் போக்க மன்றோ முயற்சி செய்திருக்கிறார். அதுபோல 1880-இலேயே சேலத்தில் இரும்புத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என்றும் மன்றோ திட்டமிட்டிருக்கிறார். பலரும் அறியாத இத்தகைய அரிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கொங்குநாட்டின் குறிப்பாக சேலம் மாவட்டத்தின் ஆங்கிலேயர் கால வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு பயன்படும் மிகச்சிறந்த நூல்.
—-
நீலவன், சா. கந்தசாமி, சிந்தியன் பதிப்பகம், பக்கங்கள் 176, விலை 100ரூ.
நடுத்தர மக்கள் அதிகமாக வாழும் புறநகர்ப் பகுதியான தென்றல் நகரில் நீலவன் என்ற மாய உருவம் வருவமதால் ஏற்படும் நிகழ்வுகளை மிகச் சுவையாக சொல்லும் நாவல். துப்பறியும் நாவலுக்கேயுரிய பரபரப்பு. இருந்தாலும் நடுத்தர வர்க்க மனிதர்களின் மனோபாவம் இந்நாவலில் மிகவும் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அதிகாரிகள் அரசியல் செல்வாக்குமிக்கவர்கள், வீடுவீடாகப் பால் பாக்கெட் போடுபவர், நடிகை என பலதரப்பட்ட மனிதர்கள் இந்த நாவலில் உயிரோடு வாழ்ந்திருக்கிறார்கள். யார் அந்த நீலவன் என்றறியும் ஆர்வம் நூலைப் படித்து முடித்த பின்பும் இருக்கிறது. நீலவன் நல்லவர்களுக்கு நல்லவனாகவும் கெட்டவர்களுக்கு கெட்டவனாகவம் இருப்பதும், அவனைப் பார்த்து பலர் பயந்தாலும் சிலர் விரும்புவதும் இன்றைய சமூக வாழ்வின் சாரம்சத்தை நமக்குச் சொல்வதாக இருக்கிறது. பல குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தமிழுலக்கு அளித்திருக்கும் நூலாசிரியரின் இன்னொரு பங்களிப்பு இந்த நூல். நன்றி: தினமணி, 05, மார்ச் 2012.