கொங்கு வேளாளர் வரலாறு
கொங்குவேளாளர் வரலாறு, முதல்பாகம், புலவர் செ. ராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு 638011, பக். 330, விலை 350ரூ.
மனைமேல் பணம் அளிப்பது ஏன்? கொங்கு நாட்டைப் பற்றியும், அதன் காணியாளர்களான, கொங்கு வேளாளர்களின் நாகரிக பண்பாட்டு பெருமைகள், வரலாற்று கீர்த்திகள், கொங்கு வேளாளர்களின் முக்கிய குலங்கள், கூட்டங்கள், குடிகள் மற்றும் அதன் உட்பிரிவுகள் ஆகியவை பற்றியும், மிக விரிவாகவும், துல்லியமாகவும் ஆய்வு செய்து தந்துள்ளார் நூலாசிரியர். தொல்பொருள் ஆய்வு, இலக்கியத் திறனாய்வு, தனிப்பாடல்கள், நாட்டுப்பாடல்கள், காணிப்பாடல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றின் துணையோடு கொங்கு குலப் பெருமைகள், கீர்த்திகள் குறித்த செவிவழி செய்திகளையும் திரட்டி, ஆய்ந்து, தொகுத்து அளித்துள்ளார். கொங்கு இல்லங்களில் நடைபெறும் திருமணச் சடங்குகளையும், அதன் உள்ளர்த்தமான செயல்பாடுகளைப் பற்றியும், உட்சடங்குகளையும் விரிவாக தந்ததோடு, பட்டியலாய் தொகுத்தும் தந்துள்ளார். மணமகளுக்கு அத்தான் முறையுள்ள மக்களில் ஒருவரை மணவறையில் அமர்த்ததி, சபையார், அருமைக்காரர் முன்னிலையில், மணமகளின் தந்தை அவருக்கு பொன் தருவார். முறை மாப்பிள்ளை இருக்க, அயலாருக்கு பெண் கொடுப்பதற்குப் பரிகாரமாக, பெண்ணுக்குப் பதில் பொன் தரப்படுகிறது. (பக். 450). திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்களும், நண்பர்களும், தங்கள் வருகையால், மணவீட்டாருக்கு ஏற்படும் செலவுகளில் பங்கெடுத்துக் கொள்வதற்கு அடையாளமாக, மொய் எழுதும் பழக்கம் ஏற்பட்டுத்தப்பட்டது. இது கொங்கு நாட்டின் பூர்வ குடிமக்களான, கொங்கு பட்டக்காரர்கள் மற்றும் வேளாளர்களின் வரலாற்றை துல்லியமாய் எடுத்துக் கூறும், முழுமையான பதிவு எனலாம். ஆய்வு கண்ணோட்டத்திலும், பல தகவல்கள் இதில் தரப்பட்டுள்ளன. ஆய்வு மாணவர்களுக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு இனங்களை பற்றி ஆய்வு செய்யும் மானிடவியலாளர்களுக்கும், இந்த நூல் பெருமளவில் உதவி செய்யும் என்பதில் ஐயமில்லை. -ஸ்ரீனிவாஸ் பிரபு. நன்றி: தினமலர், 2/11/2014.