கொலைச்சேவல்
கொலைச்சேவல், இமையம், க்ரியா, சென்னை, விலை 180ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html
எளிய மனிதர்களின் கதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் நம்காலத்தின் ஆகச்சிறந்த யதார்த்த எழுத்தாளர் இமையம். இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு கொலைச்சேவல். கிராமப்புறங்கள் நவீன வாழ்க்கையை எதிர்கொள்வது பற்றிய பெருமூச்சுகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் உள்ளன. வாசிப்பவர்களை அறையும் பட்டவர்த்தனமான யதார்த்த உண்மைகளைச் சொல்லும் கதைகளாக இவை படைக்கப்பட்டுள்ளன. அணையும் நெருப்பு என்கிற கதையில் வரும் கணவனை இழந்து சமூகத்தாலும் ஊடகங்களாலும் விபச்சாரி என்ற பட்டத்தை சுமத்தப்பட்ட பெண் கேட்கும் கேள்விகள் மிகவும் உக்கிரமானவை. தன் பின்னால் சுற்றும் இளைஞனை உட்காரவைத்து அவள் கேள்வி கேட்கிறாள். அது அந்த இளைஞனை நோக்கி அல்ல. ஒட்டுமொத்த உலகை நோக்கி ஓர் அபலைப் பெண்ணின் கேள்விகளாக எழுந்து உலுக்குகின்றன. அதுபோல ஒதுக்கப்பட்ட பெண்ணின் சார்பில் பேச யாருமே இல்லை. ஆனால் இமையம் அந்த பெண்ணாக அமர்ந்து இச்சமூகத்தின் முன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறாள். அந்தப் பையன் ஒரு சொல்கூட பதில் சொல்ல முடிவதில்லை. பளிச்சென்ற குறும்படமாக ஆக்கத் தகுந்தது இந்த சிறுகதை. மணலூரின் கதை என்ற இத்தொகுப்பில் உள்ள நீளமான முதல் கதை எப்படி ஒரு கிராம மக்கள் தொலைக்காட்சியில் முகம் காட்ட வேண்டும் என்பதற்காக ஜோடிக்கப்பட்ட ஒரு கதையை தங்கள் ஊடகங்களின் இயங்கியல் பற்றிய ஆழமான கதை. இப்படித்தான் கதைகளும் சம்பவங்களும் செய்திகளும் ஊடகங்களால் புனைவாக கண்ணும் காதும் வைக்கப்பட்டு உருவாகி பின்னர் உயிர் பெற்று அலைகின்றன என்பதே எதார்த்தம். இத்தொகுப்பின் தலைப்பாக இடம் பெற்றிருக்கும் கதையான கொலைச்சேவல் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் இன்னொரு கதை. தன்னுடன் உறவு கொண்டதும் மட்டுமல்லாமல் தன் மகளையும் ஈர்த்துக்கொண்ட ஒருவனுக்கு வேறு வழியில்லாமல் மகளை திருமணம் செய்து வைக்கிறாள் கணவனை இழந்த ஒருத்தி. அதன் பின்னால் தன் இன்னொரு மகளையும் அவனே இழுத்துக் கொண்டு அவன் ஓடிவிட அவன் மீது செய்வினை செய்து சேவலைச் சூலத்தில் குத்துவதற்காகச் செல்லும் ஓர் எளிய பெண்ணின் கதை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்னரும் தன் இளையபெண் அக்கா புருசந்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதைக் கண்டு கண்ணீர் பெருக்கும் அந்த பெண் கடைசியில் செய்வினை செய்யும் பூசாரியிடமே சரணடைய முடிகிறது. மிக எதார்த்தமான முறையில் விரிந்து செல்கிறது இக்கதை. ஏற்கெனவே பத்திரிகைகளில் பிரசுரமான மற்றும் பிரசுரமாகத கதைகளுமாகச் சேர்த்து இத்தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் உள்ளன. அவை வாசகனுக்கு ரத்தமும் சதையுமாக யதார்த்த வாழ்வை அறிமுகப்படுத்துகின்றன. நன்றி: அந்திமழை, 1/3/2014.